செய்திகள் :

வேகவேகமாக முன்னேறும் தமிழ்நாடு... குறைகளில் கவனம் செலுத்தினால், ஈடு இணையற்ற வெற்றியே!

post image

‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்கிற ஆதங்கம் ஒரு காலத்தில் தென் மாநில அரசியல் தலைவர்களிடமும் மக்களிடமும் இருந்தது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இதை அரசியல் பிரசாரமாகவே முன்னெடுத்தார்கள். காரணம், எல்லாவற்றுக்கும் மத்திய அரசையே எதிர்பார்த்திருக்கும் நிலை அன்று இருந்தது தான். சொல்லப்போனால், இன்றும் அந்த நிலைமையில் பெரிதாக மாற்றமில்லை. அப்படியிருந்தும், தமிழ்நாட்டின் வளர்ச்சி... நாடே உற்று நோக்கும் அளவுக்கு உயர்ந்துகொண்டிருப்பது பெருமைக்குரிய விஷயமே.

இந்திய பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு (PM-EAC), மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை மற்றும் சி.ஏ.ஜி (மத்திய கணக்குத் தணிக்கை ஆணையம்) என மத்திய அரசின் பல்வேறு அமைப்புகள், வெளியிட்டு வரும் அறிக்கைகள் அனைத்துமே, இந்தியாவின் முன்னுதாரண மாநிலம் என்று தமிழ்நாட்டையே கைகாட்டுகின்றன.

ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு உயர்ந்திருக்கிறது; பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் வளர்ச்சி வேகத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது; தமிழ்நாடு மாநிலத்தின் மொத்த பொருளாதார வளர்ச்சி (GSDP) 14% உயர்ந்து, 2022-23-ம் நிதி ஆண்டில் ரூ.23.64 லட்சம் கோடியாக உள்ளது; தமிழ்நாட்டின் தனிநபர் ஜி.எஸ்.டி.பி தேசிய சராசரியைவிட (ரூ.1.96 லட்சம்) 56% அதிகரித்து, ரூ.3.08 லட்சமாக உள்ளது; தொழில்துறை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது... என வளர்ச்சி குறித்த மகத்தான புள்ளிவிவரங்கள் தொடர்ந்து வெளியாவது, தமிழ்நாட்டின் மதிப்பை மேலும் மேலும் உயர்த்துகின்றன.

இது, தமிழ்நாட்டை ஆண்ட, ஆளும் அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிகளுக்குக் கிடைத்திருக்கும் பெருவெற்றியே. அதிலும், சமீப ஆண்டுகளாக, ‘வரிப் பகிர்வில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கப்படுகிறது’ என்கிற குற்றச்சாட்டை தற்போதைய தி.மு.க அரசு தொடர்ந்து முன்வைத்துவரும் சூழலிலும், இத்தகைய வளர்ச்சியை தமிழ்நாடு பதிவு செய்திருப்பது, இன்றைய ஆட்சியாளர்களுக்குக் கிடைத்திருக்கும் பாராட்டுச் சான்றிதழே!

அதேசமயம், தமிழ்நாடு அரசு சார்ந்த நிறுவனங்கள் பலவும் கடும் நஷ்டத்தில் இயங்குகின்றன. பெரும் கடன் சுமையில் இருக்கின்றன. 68 அரசு நிறுவனங்களில், 34 நிறுவனங்கள் ரூ.1,648 கோடி லாபம் ஈட்டியுள்ளன. ஆனால், 30 நிறுவனங்கள் ரூ.22,000 கோடி நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளன என்பது போன்ற பல்வேறு குறைபாடுகளும் வரிசை கட்டி நிற்கின்றன.

தற்போதைய தொடர் வளர்ச்சி, ‘ஈடு இணையற்ற வளர்ச்சி’ என்பதாக மாற்றப்பட வேண்டும் என்பது முக்கியம். அத்தகைய நிலையை அடைய வேண்டுமெனில், குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இந்த விஷயத்திலும் தமிழ்நாடு அரசு தீவிர கவனம் செலுத்தும் என்று நம்புவோம்!

- ஆசிரியர்