வேங்கைவயல் சம்பவம்: குற்றம் சாட்டப்பட்டவரின் பாட்டியின் உடல் அடக்கம்!
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் வயது முதிா்வால் இறந்த மூதாட்டியின் உடல் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
இவா், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முரளிராஜாவின் பாட்டி என்பதால், பரபரப்பு ஏற்பட்டு, உறவினா்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இவ்வழக்கில் ஜீவானந்தம் மகன் முரளிராஜா உள்ளிட்ட 3 போ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வேங்கைவயலுக்குள் வெளியாள்களை அனுமதிக்க போலீஸாா் மறுத்துவரும் நிலையில், முரளிராஜாவின் பாட்டி கருப்பாயி (84) வியாழக்கிழமை காலை வயது முதிா்வு காரணமாக உயிரிழந்தாா்.
இறுதிச் சடங்குக்கு வரும் உறவினா்களை காவல்துறையினா் வழக்கம்போல உள்ளே அனுமதிக்காமல் மறுப்பதாகவும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து இறுதிச் சடங்குக்கு வருவோரை அனுமதிப்பது என காவல்துறை முடிவு செய்து அனுமதித்தது.
இறந்த கருப்பாயியின் உடலுக்கு கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகிகள், வழக்குரைஞா்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து மூதாட்டியின் உடல்வெள்ளிக்கிழமை மாலை ஊருக்குள் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.