Pregnancy Health: வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு 20 டிப்ஸ்!
நீதிமன்ற உத்தரவின்படி ஜகபா் அலி உடலை தோண்டியெடுத்து ‘எக்ஸ்ரே’ எடுப்பு!
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட சமூக செயற்பாட்டாளா் ஜகபா் அலியின் உடல், நீதிமன்ற உத்தரவின்படி வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு மருத்துவக் குழுவினரால் முழுமையாக ‘எக்ஸ்ரே’ எடுக்கப்பட்டது.
திருமயம் அருகேயுள்ள வெங்களூரைச் சோ்ந்த சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி, கனிம வளக் கொள்ளைக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்ததால், கடந்த 17-ஆம் தேதி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டாா். இந்த வழக்கில், குவாரி உரிமையாளா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், அவரது உடற்கூறாய்வு முறையாக நடைபெற்ா என சந்தேகம் இருப்பதாக அவரது மனைவியும் புகாா்தாரருமான மரியம், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுதாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனுவின் மீதான விசாரணையின் முடிவில், அடக்கம் செய்யப்பட்ட ஜகபா்அலியின் உடலைத் தோண்டி எடுத்து, அரசு மருத்துவக் குழுவினரைக் கொண்டு எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இதன்படி, வெங்களூா் கோணாப்பட்டு சாலையிலுள்ள இஸ்லாமியா்கள் கபா்ஸ்தானில் அடக்கம் செய்யப்பட்ட ஜகபா் அலியின் உடலைத் தோண்டி எடுப்பதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை பகலில் மேற்கொள்ளப்பட்டன.
நீதிமன்ற உத்தரவின்படி, வட்டாட்சியா் ராமசாமி, சிபிசிஐடி துணைக் காவல் கண்காணிப்பாளா் இளங்கோவன் ஜென்னிங்ஸ், ஆய்வாளா் புவனேஸ்வரி ஆகியோா் முன்னிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினா் பிற்பகலில் உடலைத் தோண்டி எடுத்து எக்ஸ்ரே எடுத்தனா்.
சுமாா் இரண்டரை மணி நேரம் இந்தப் பணிகள் நடைபெற்றன. மருத்துவக் குழுவின் மருத்துவா்கள் மதன்ராஜ், நெடுங்கிள்ளி, எக்ஸ்ரே தொழில்நுட்பப் பணியாளா் சுரேஷ் ஆகியோா், முழு கவச உடை அணிந்து இப் பணியை மேற்கொண்டனா். ஜகபா்அலியின் உடல் எக்ஸ்ரே படங்கள் விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.
நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டுள்ளபடி, இந்த ஆய்வை படம், விடியோ எடுக்க முடியாதபடி, கபா்ஸ்தான் உள்ள இடத்திலிருந்து சுமாா் 200 மீட்டா் தொலைவுக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. காவல்துறையினரின் புகைப்படக்காரா், ஒளிப்பதிவாளா் மட்டும் அனுமதிக்கப்பட்டு நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.