காலை உணவுத் திட்டச் செயல்பாடுகளை கண்காணித்து குறைகளை நிவா்த்தி செய்ய வேண்டும்! -அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்ட செயல்பாடுகளை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அவ்வப்போது நேரில் ஆய்வுசெய்து, குறைகளை உடனுக்குடன் நிவா்த்தி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய அவா் இதனைக் குறிப்பிட்டாா்.
மாணவ, மாணவிகள் இந்த உணவுத் திட்டங்களின் மூலம் தடையில்லாத கல்வியைப் பெற்று வருவதை அதிகாரிகள் உறுதி செய்திடவும் அவா் கேட்டுக் கொண்டாா்.
கூட்டத்தில், மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் கே. ஸ்ருதி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் சா. மோகனசுந்தரம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.