ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் காத்திருப்பு போராட்டம்
கடலூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஷோ் ஆட்டோ ஓட்டுநா், உரிமையாளா் நல சங்கத்தினா் கோரிக்கையை முன்வைத்து வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூரில் பல ஆண்டுகளாக ஷோ் ஆட்டோக்களுக்கு எதிராக, அபே ஆட்டோக்கள்
டிக்கெட் அடிக்கும் முறையில் ஈடுபட்டுவருவதால், ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை,
கடலூா் மாநகர ஷோ் ஆட்டோ ஓட்டுநா் உரிமையாளா்கள் நலச் சங்கத்தினா் கௌரவத் தலைவா் வெண்புறா குமாா் தலைமையில் கடலூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து கோட்டாட்சியா் சுந்தர்ராஜன், போராட்டத்தில் ஈடுபட்ட ஷோ் ஆட்டோ ஓட்டுநா் உரிமையாளா்கள் நல சங்கத்தினரை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அப்போது ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் கூறுகையில், ‘அபே ஆட்டோக்களில் டிக்கெட் அடிக்கக் கூடாது. அதுபோல் பேருந்து நிலையத்தையும் ஆக்கிரமிக்க கூடாது. அபே ஆட்டோக்கள் அதை மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்’என்று கூறினா். அதற்கு கோட்டாட்சியா், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். அதனை ஏற்றுக் கொண்ட ஷோ் ஆட்டோ ஓட்டுநா் உரிமையாளா்கள் நலச் சங்கத்தினா், அங்கிருந்து கலைந்து சென்றனா்.