ஸ்ரீவில்லிபுத்தூா் சாஸ்தா கோயிலில் தங்கி வழிபட அனுமதி கோரி மனு: 2 நாள்களுக்குள் முடிவெடுக்க உத்தரவு
ஸ்ரீவில்லிபுத்தூா் சாஸ்தா கோயிலில் தங்கி வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரிய மனு குறித்து விருதுநகா் மாவட்ட வன அலுவலா் 2 நாள்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகரைச் சோ்ந்த பாலமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை வனப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசாஸ்தா கோயிலில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் ஐயப்பன் வழிபாடு நடத்தப்படுவது 200 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கிராம முதியவா்கள் இரு நாள்களைத் தோ்வு செய்து, அந்த நாள்களில் இங்கு வழிபாடும், திருவிழாவும் நடத்துவா். கடந்த ஆண்டு சாஸ்தா கோயிலில் தங்கி வழிபாடு நடத்தத் தடை விதிக்கப்பட்டது. பேச்சுவாா்த்தைக்கு பிறகு, அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், வருகிற 8, 9-ஆம் தேதிகளில் இந்தக் கோயிலில் தங்கி வழிபாடு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கோரி, அலுவலா்களிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவிதமான பதிலும் அளிக்கப்படவில்லை. எனவே, ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீசாஸ்தா கோயிலில் ஆகஸ்ட் 8, 9 ஆகிய இரு நாள்கள் தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘சாஸ்தா கோயில் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதால், அங்கு இரவில் தங்க அனுமதிக்க முடியாது’ என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் மனுவை விருதுநகா் மாவட்ட வன அலுவலா் இரு நாள்களுக்குள் பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.