ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!
ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை, மேக வெடிப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளது. ஜூன் 20 முதல் ஜூலை 11 வரை 92 பேர் உயிரிழந்துள்ளனதாக வருவாய்த் துறையின் பேரிடர் மேலாண்மை பிரிவின் கீழ் மாநில அவசரக்கால செயல்பாட்டு மையம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மொத்த இறப்புகளில் 56 பேர் மேக வெடிப்புகள், திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள், மின்சாரம் பாய்தல், நீரில் மூழ்குதல் உள்ளிட்ட மழை தொடர்பான சம்பவங்களால் உயிரிழந்தனர். கூடுதலாக 36 பேர் சாலை விபத்துகளால் உயிரிழந்துள்ளனர். குலு, சம்பா, சோலன் மாவட்டங்களில் போக்குவரத்து தொடர்பான உயிரிழப்புகள் அதிகளவில் பதிவாகியுள்ளன.
மாநில பேரிடர் மீட்புப் படையின் அறிக்கையின்படி, மண்டி மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதியாக உருவெடுத்துள்ளது. கடந்த 11 நாள்களில் மட்டும் மழை தொடர்பான 15 இறப்புகள், 27 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். மண்டியில் உள்ள 16 மெகாவாட் படிகாரி நீர்மின் திட்டமும் மழையால் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது.
அதே காலகட்டத்தில் சொத்துக்கள், கால்நடை இழப்புகளும் பதிவாகியுள்ளன. மாவட்டம் முழுவதுமாக மொத்தம் 844 வீடுகள், 631 மாட்டுத் தொழுவங்கள் சேதமடைந்தன. மேலும் 164 கடைகள், 31 வாகனங்கள் மற்றும் 14 பாலங்கள் சேதமடைந்தன.
மண்டி மாவட்டத்தில் மட்டும் 854 க்கும் மேற்பட்ட கால்நடைகள் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. 534 நபர்கள் மாவட்டம் முழுவதும் 16 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிர்வாகம் 5,228 தார்பாய்கள், 3,093 ரேஷன் கிட்களை விநியோகித்துள்ளது. மீட்பு முயற்சிகள் மூலம் 290 பேர் வெளியேற்றப்பட்டனர், இதில் 92 மாணவர்கள், இந்திய விமானப்படையால் விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். இரண்டு கர்ப்பிணிப் பெண்களும் இதில் அடங்குவர்.
பருவமழை தொடர்பான பேரழிவுகள் காரணமாக இமாச்சலப் பிரதேசம் முழுவதும் மொத்தம் ரூ. 751.78 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், குறிப்பாக நிலச்சரிவு ஏற்படக்கூடிய மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.