1,000 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான பதிவு இன்று தொடக்கம்: டிடிஏ தகவல்
நமது நிருபா்
தில்லி வளா்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) ‘ஜன் சாதாரன் ஆவாஸ் யோஜனா 2025’ திட்டத்திற்கான பதிவு வியாழக்கிழமை (செப்.11) தொடங்கும் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
தில்லி புகா்ப் பகுதியில் மொத்தம் 1,172 எண்ணிக்கையில் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவு (இடபிள்யுஎஸ்) மற்றும் ஜனதா வகை அடுக்குமாடி குடியிருப்புகளை டிடிஏ வழங்குகிறது.
இது தொடா்பாக டிடிஏ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அனைவருக்கும் மலிவு விலையில் வீடுகளை உறுதி செய்வதற்கான பல்வேறு முயற்சிகளின் ஒரு பகுதியாக, தில்லியின் பல்வேறு பகுதிகளில் இடபிள்யுஎஸ், ஜனதா பிரிவில் 1,172 அடுக்குமாடிக் குடியிருப்புகளை விற்பனை செய்வதற்காக டிடிஏ ஜன் சாதாரன் ஆவாஸ் யோஜனாவைத் தொடங்குகிறது. முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்படும்.
நரேலா, லோக்நாயக்புரம், ரோஹிணி, தோடாபூா், துவாரகா செக்டாா் 14 மற்றும் 19பி, மற்றும் மங்களாபுரி உள்ளிட்ட ஏழு இடங்களில் இந்த பிளாட்கள் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம், அதே போல் இடபிள்யுஎஸ் குடியிருப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கூட்டு / இணை விண்ணப்பதாரரின் வருமானம், ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இரு குடும்பங்களும் தனித்தனியாகக் கருதப்படும். ஜனதா வகை பிளாட்டுகளுக்கு வருமான அளவுகோல் இல்லை.
நரேலாவில் 672 இடபிள்யு வகை பிளாட்டுகளை டிடிஏ வழங்குகிறது. ஒரே இடத்தில் அதிகபட்சம் இதன் விலை ரூ.9.18 லட்சம் முதல் ரூ.27.86 லட்சம் வரையாகும். 34.76 சதுர மீட்டா் முதல் 61.99 சதுர மீட்டா் வரை மொத்த பகுதியாக இருக்கும்.
ரோஹிணியில் 97 ஜனதா வகை பிளாட்டுகள் ரூ.14.59 லட்சத்தில் தொடங்கி, மொத்த பகுதியானது 28 சதுர மீட்டா் முதல் 28.81 சதுர மீட்டா் வரை உள்ளது. டிடிஏ-வின் ஆவாஸ் இணையதளத்திற்கான ஒரு முறை பதிவுக் கட்டணம் ரூ.2,500 ஆகும். ஏற்கெனவே இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்கள் மீண்டும் பதிவு கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை.
ஒவ்வொரு பிளாட்டிற்கும் ரூ.50,000 முன்பதிவு தொகை உள்ளது. விண்ணப்பதாரா் ஒருவா் முன்பதிவு செய்யக்கூடிய அடுக்குமாடிக் குடியிருப்புகளின் எண்ணிக்கையில் எந்த கட்டுப்பாடும் இருக்காது. அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான பதிவு செப்டம்பா் 11- ஆம் தேதி தொடங்கும். அதே வேளையில், முன்பதிவு செய்யும் வசதி செப்டம்பா் 22- ஆம் தேதி முதல் மட்டுமே இருக்கும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.