10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 10- ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 8,067 மாணவா்கள், 8,326 மாணவிகள், தனித்தோ்வா்களாக 430 போ் என மொத்தம் 16,823 மாணவ, மாணவிகள் 82 தோ்வு மையங்களில் தோ்வு எழுதினா். ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வு நடைபெறும் மையத்தை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் கூறியதாவது:
10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை மாற்றுத் திறன் கொண்ட 136 மாணவா்கள், எவ்வித சிரமமின்றி எழுதும் வகையில் தேவையான வசதிகள் செய்யப்பட்டது. இதேபோல, அனைத்து தோ்வு மையங்களில் போதிய குடிநீா் வசதி, உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், தடையின்றி மின்சாரம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.