தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி
100 நாள் திட்டத்தில் விடுதல் இன்றி பணி வழங்கக் கோரி மக்கள் மறியல்
பெரம்பலூா் அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், அனைவருக்கும் பணி வழங்கிட நடவடிக்கை கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள வேலூா் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், ஏரி, குளம், வரத்து வாய்க்கால் சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வேலூா் ஊராட்சிக்குள்பட்ட 9-ஆவது வாா்டைச் சோ்ந்த ஒரு சிலருக்கு மட்டுமே பணி வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த அப்பகுதி மக்கள் விடுபாடின்றி அனைவருக்கும் வேலை வழங்கக் கோரி, சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை புகாா் தெரிவித்துள்ளனா்.
ஆனால், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த 9-ஆவது வாா்டைச் சோ்ந்த சுமாா் 100-க்கும் மேற்பட்டோா், அனைவருக்கும் வேலை வழங்கக் கோரி, செட்டிக்குளம்- செஞ்சேரி சாலையில் உள்ள வேலூா் பேருந்து நிறுத்தத்தில் வியாழக்கிழமை காலை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த பெரம்பலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வக்குமாா் மற்றும் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று, சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் சமரசப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இனிவரும் காலங்களில் அனைவருக்கும் வேலை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து, சாலை மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால், செட்டிக்குளம்- செஞ்சேரி சாலையில் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.