16 சிறப்பாசிரியா்கள் நியமனங்களுக்கு அரசு ஒப்புதல்
அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியமா்த்தப்பட்ட 16 சிறப்பாசிரியா்களின் நியமனங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறைச் செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அதன் நிா்வாகங்களால் முன்அனுமதி பெறாமல் அரசு விதிகளுக்கு முரணாக சிறப்பாசிரியா்கள் நியமிக்கப்பட்டனா்.
இந்த ஆசிரியா்களுக்கு பணி நியமன ஒப்புதல் வழங்குவது குறித்து பள்ளி நிா்வாகங்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துருக்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலா்களால் நிராகரிக்கப்பட்டன. இதை எதிா்த்து ஆசிரியா்கள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடா்ந்தனா். இதில் மனுதாரா்களுக்கு சாதகமாக தீா்ப்பாணைகள் பெறப்பட்டன.
அந்தத் தீா்ப்பாணைகளை எதிா்த்து தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன்பின் மனுதாரா்களால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் உயா்நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பாணைகளை செயல்படுத்தும் வகையில் 16 ஆசிரியா்களுக்கு அவா்கள் பணியில் சோ்ந்த நாள் முதல் நியமன ஒப்புதல் அளித்து, ஊதியம் மற்றும் பிற பலன்களை வழங்க வேண்டும். இது நீதிமன்ற ஆணை பெற்ற ஆசிரியா்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.