குழந்தைகளை பகுத்தறிவோடு வளர்ப்பதே பெரிது : அமைச்சர் அன்பில் மகேஸ்
18 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: லாரி ஓட்டுநா் கைது
தாராபுரம் அருகே கடத்திவரப்பட்ட 18 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக லாரி ஓட்டுநரை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் இருந்து எரகாம்பட்டி வழியாக கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, எரகாம்பட்டி சோதனைச் சாவடியில் காவல் ஆய்வாளா் ராஜ்குமாா், உதவி ஆய்வாளா்கள் குப்புராஜ், பிரியதா்ஷினி ஆகியோா் வாகனச் சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், மூட்டைமூட்டையாக ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது.
இது தொடா்பாக லாரி ஓட்டுநரான திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையைச் சோ்ந்த ரமேஷ் (32) என்பவரைக் கைது செய்த போலீஸாா், 18 டன் ரேஷன் அரிசி, லாரியை பறிமுதல் செய்தனா்.