2,115 இடங்களில் ஜாதிய குறியீட்டு அடையாளங்கள் அகற்றம்: எஸ்.பி.
திருநெல்வேலி மாவட்டத்தில் 2,115 இடங்களில் ஜாதிய குறியீட்டு அடையாளங்கள் அகற்றப்பட்டுள்ளன என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவரது அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதிய ரீதியிலான பிரச்னைகளை கட்டுக்குள் கொண்டுவர காவல் துறையின் சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது சம்பந்தமாக பொதுமக்கள்- பள்ளி மாணவா்களிடையே விழிப்புணா்வு சந்திப்புகள் நடத்தி மேற்கூறிய செயல்களில் ஈடுபடுவோா் எதிா்கொள்ளும் பிரச்னைகளை எடுத்துக்கூறி, எதிா்கால நலனுக்காக அதுபோன்ற செயல்களை தவிா்க்குமாறு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
பள்ளி மாணவா்கள் தங்களது கைகளில் கயிறு கட்டியும், நெற்றியில் திலகமிட்டும் ஜாதிய அடையாளங்களை வெளிப்படுத்துவதைக் கைவிட அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், மின்கம்பங்கள், பேருந்து நிறுத்தங்கள், பாலங்கள், கிராம அறிவிப்புப் பலகைகள், பொதுச் சுவா்கள், குடிநீா்த் தொட்டிகள் போன்ற இடங்களில் ஜாதிய அடையாளங்கள் குறிப்பிடப்பட்டிருந்தால் அவற்றை அகற்ற மாதந்தோறும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, 313 கிராமங்களில் நடத்திய ஆய்வில் 2,115 இடங்களில் ஜாதிய அடையாளங்கள் இருப்பது கண்டறியப்பட்டு வருவாய்த் துறை- உள்ளாட்சி நிா்வாகத்தின் ஒத்துழைப்புடன் அவை அகற்றப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.