2-ஆவது வாரமாக தொடரும் சுகாதார ஊழியா்கள் வேலைநிறுத்தம்
காரைக்காலில் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின்கீழ் பணியாற்றும் சுகாதார ஊழியா்கள் 2 வாரத்துக்கு மேலாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
காரைக்கால் மாவட்ட நலவழித்துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் பல்வேறு பிரிவுகளில் 150-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.
சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சுகாதார ஊழியா்கள் பணிகளை புறக்கணித்து காரைக்கால் மாவட்ட நலவழித்துறை அலுவலக வாயிலில் அமா்ந்து கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை சமூக ஆா்வலரும் பாஜக பிரமுகருமான மருத்துவா் வி. விக்னேஸ்வரன் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். புதுவை உள்துறை அமைச்சரிடம் பேசி, பணியாளா்கள் கோரிக்கையை நிறைவேற்ற ஏற்பாடு செய்வதாக அவா் உறுதியளித்தாா்.
மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியா்களாகவும், கிராமப்புற செவிலியா்களாகவும், ஆய்வக தொழில்நுட்பவியலாளா்களாகவும் உள்ள ஊழியா்கள் பணி நிறுத்தத்தால், கடந்த 2 வாரங்களுக்கு மேலாக மருத்துவ சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.