2-வது ஒருநாள்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி அயர்லாந்து வெற்றி!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜிம்பாம்ப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 16) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே முதலில் விளையாடியது.
இதையும் படிக்க: ஐபிஎல் 2025: 10 அணிகளின் முழுமையான போட்டி அட்டவணை விவரம்!
ஜிம்பாப்வே - 245/10
முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 49 ஓவர்களின் முடிவில் 245 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் வெஸ்லி மத்வீர் அதிகபட்சமாக 70 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, சிக்கந்தர் ராஸா 58 ரன்களூம், வெலிங்டன் மசகட்ஸா 35 ரன்களும் எடுத்தனர்.
அயர்லாந்து தரப்பில் மார்க் அடாய்ர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கர்டிஸ் கேம்பர் 3 விக்கெட்டுகளையும், ஹியூம், ஜோஷ்வா லிட்டில் மற்றும் ஆண்டி மெக்பிரின் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
அயர்லாந்து வெற்றி
246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணி, 48.4 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது. அயர்லாந்து அணியில் கேப்டன் பால் ஸ்டிர்லிங் அதிகபட்சமாக 89 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கர்டிஸ் கேம்பர் 63 ரன்களும், லோர்கான் டக்கர் 36 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க: மும்பை இந்தியன்ஸ் அணியில் முஜீப் வுர் ரஹ்மான்; யாருக்குப் பதிலாக தெரியுமா?
ஜிம்பாப்வே தரப்பில் டிரெவர் குவாண்டு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரிச்சர்டு நிகராவா மற்றும் பிளெஸிங் முஸர்பானி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட கர்டிஸ் கேம்பருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அயர்லாந்து அணி 1-1 என சமன் செய்தது.