2-வது ஒருநாள்: பென் டக்கெட், ஜோ ரூட் அரைசதம்; இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் இன்று (பிப்ரவரி 9) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
இதையும் படிக்க: உலகக் கோப்பையைவிட சாம்பியன்ஸ் டிராபி மிகவும் சவாலானது: டெம்பா பவுமா
பென் டக்கெட், ஜோ ரூட் அரைசதம்
இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். இந்த இணை இங்கிலாந்துக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. இருப்பினும், பில் சால்ட் 26 ரன்களில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தனர். தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விரட்டிய பென் டக்கெட் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 56 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும்.
அதன் பின், ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். ஹாரி ப்ரூக் 52 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஜோஸ் பட்லர் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் 72 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும். அடில் ரஷீத் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து அசத்தினார். இறுதிக்கட்டத்தில், லியம் லிவிங்ஸ்டன் 32 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இதையும் படிக்க: 14 ஆண்டுகளில் முதல் முறையாக இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
49.5 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, ஹார்திக் பாண்டியா மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.