20 உயா்நிலைப் பள்ளிகள் தரம் உயா்வு: அரசாணை வெளியீடு
பள்ளிக் கல்வித் துறையில் 20 அரசு உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், வரலாறு, பொருளியல், வணிகவியல், கணினி அறிவியல் என தலா 10 ஆசிரியா் பணியிடங்கள் வீதம் 200 ஆசிரியா் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடலூா் (பண்ருட்டி), கள்ளக்குறிச்சி (ரிஷிவந்தியம்), கிருஷ்ணகிரி (நேரளகிரி), செங்கல்பட்டு (பேரனூா் கிராமம்), திண்டுக்கல் (வளவிசெட்டிபட்டி), திருச்சி (கள்ளக்காம்பட்டி), திருப்பத்தூா் (திம்மாம்பேட்டை), மதுரை (செட்டிகுளம்), சென்னை (மாத்தூா்-மாதவரம்), விழுப்புரம் (கஞ்சனூா்), திருச்சி (கலைஞா் கருணாநிதி நகா்), விழுப்புரம் (மேல்கரணை), ராமநாதபுரம் (வாலிநோக்கம்-கடலாடி வட்டம்), திருப்பூா் (முதலிபாளையம்), கிருஷ்ணகிரி (பாத்தகோட்டா-சூளகிரி வட்டம்), சேலம் (லக்கம்பட்டி ஊராட்சி, நீதிபுரம்), திருவண்ணாமலை (வேளானந்தல்), நாகப்பட்டினம் (கணபதிபுரம்), ராமநாதபுரம் (புதுமடம்), கன்னியாகுமரி (வாரியூா்) ஆகிய 20 இடங்களில் செயல்பட்டு வரும் அரசு உயா்நிலைப் பள்ளிகள் தற்போது அரசு மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டுள்ளன.
இதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் பிறப்பித்துள்ளாா். துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது வெளியிட்ட அறிவிப்பனை செயல்படுத்தும் வகையில் பள்ளிகள் தரம் உயா்த்தப்பட்டுள்ளன.