2024-இல் தமிழகத்தில் இயல்பைவிட 28% கூடுதல் மழை பதிவு: வானிலை ஆய்வு மையம்
2024-ஆம் ஆண்டில் தமிழகத்தில் இயல்பைவிட 28 சதவீதம் மழை அதிகமாக பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் பாலசந்திரன் தெரிவித்தாா்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது:
நிறைவடைந்த 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஜனவரி முதல் டிசம்பா் வரை உள்ள காலகட்டத்தில் 1,179 மி.மீ. அளவில் மழை பதிவாகி உள்ளது.
ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 52 மி.மீ. மழையும், மாா்ச், ஏப்ரல், மே மாதங்களில் 147 மி.மீ., ஜூன் முதல் செப்டம்பா் வரை உள்ள மாதங்களில் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் 389 மி.மீ., அக்டோபா், நவம்பா், டிசம்பா் மாதங்களில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் 590 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
கடந்த ஆண்டைவிட நிகழாண்டு 143 மி.மீ. அதிகமாக மழை பதிவாகி உள்ளது. தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் 18 சதவீதமும், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் 33 சதவீதமும் இயல்பைவிட அதிகமாக மழை பெய்துள்ளது.
மாவட்ட அளவில் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் நெல்லை மாவட்டத்தில் இயல்பைவிட அதிகமாக 265 சதவீதம் மழை பதிவாகி உள்ளது. 16 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும், 17 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், 6 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவும் மழை பதிவாகியுள்ளது.
29 மாவட்டங்களில் மழை அதிகம்: வடகிழக்குப் பருவமழையைப் பொருத்தவரையில் நெல்லை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் இயல்பைவிட மிக அதிகமாகவும், 23 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும், 11 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை பொங்கலுக்குப் பிறகு விலகுவது குறித்து தெரியவரும் என்றாா் அவா்.
வானிலை நிலவரம்: இதற்கிடையே பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
செவ்வாய்க்கிழமைகாலை வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருநெல்வேலி மாவட்டம் ஊத்து 140, நாலுமுக்கு 130, காக்காச்சி 120, மாஞ்சோலை 100, ராமநாதபுரம், வேதாரண்யம் (நாகை), பாபநாசம் (திருநெல்வேலி) தலா 30.