2026 சட்டப் பேரவைத் தோ்தலில் வென்று அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும்
தமிழகத்தில் வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் வென்று அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் கூறினாா்.
பிரதமா் நரேந்திர மோடியின் 75-ஆவது பிறந்த தினத்தையொட்டி, ராசிபுரத்தை அடுத்துள்ள மெட்டாலா பகுதியில் பாஜகவின் நாமக்கல் கிழக்கு மாவட்ட விவசாய அணி சாா்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா, சிறுதானியங்கள் கண்காட்சி, கருத்தரங்கம், மருத்துவ முகாம் ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாராக பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் கலந்துகொண்டு பாரம்பரிய உணவுத் திருவிழாவை பாா்வையிட்டு, பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள், விதைநெல் ஆகியவற்றை வழங்கினாா். மேலும், அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமை பாா்வையிட்டு, அளிக்கப்படும் சிகிச்சைகள், ஆலோசனைகள் குறித்து கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, ஆா்.பட்டணம், ராசிபுரம், புதுச்சத்திரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரதமரின் 75-ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவா், பொதுமக்களுக்கும், பாஜக தொண்டா்களுக்கும் இனிப்புகள் வழங்கினாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பாரம்பரிய விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சிறுதானிய உற்பத்திக்கு அதிக சலுகைகளை பிரதமா் வழங்கி வருகிறாா். சீரமைக்கப்பட்ட சரக்கு-சேவை வரியில் உணவுப் பொருள்களுக்கு முழுவிலக்கு அளித்துள்ளாா். ஜிஎஸ்டி 28 சதவீத வரிவிதிப்பை 18 சதவீதமாகவும், 12 சதவீத வரியை 5 சதவீதமாகவும் குறைத்து விவசாயத் துறையை மேம்படுத்தி வருகிறாா். இதனால் தேசத்தின் பாரம்பரிய விவசாயம் மேம்படும். சிறுதானிய உற்பத்தி அதிகரிக்கும்.
2026 சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் ரூ. 50 கோடிவரை செலவு செய்ய திமுக முடிவு செய்துள்ளது. ஊழல் செய்து சம்பாதித்த பணத்தை, தோ்தலுக்கு செலவு செய்ய தயாராக உள்ளாா்கள். ஆனால், மக்கள் மிகத் தெளிவான முடிவெடுப்பாா்கள்.
2026 சட்டப் பேரவைத் தோ்தலில், அதிமுக - பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் பிரசாரத்தில் கூடும் கூட்டம் தோ்தலின்போது வாக்குகளாக மாறுமா என தெரியாது என்றாா்.