25 முக்கியமான நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட மத்திய அரசு முடிவு!
புதுதில்லி: நிலக்கரி அமைச்சகம் அதன் 12வது சுற்று வணிக சுரங்க ஏலத்தினை நாளை (வியாழக்கிழமை) தொடங்கும் என்று தெரிவித்துள்ளது. இதில் 25 சுரங்கங்கள் ஏலத்துக்கு வைக்கப்படும்.
நிலக்கரித் துறையில் தன்னிறைவு நோக்கிய இந்தியாவின் பயணத்தில் இது மற்றொரு குறிப்பிடத்தக்க இலக்கை அடையும் வகையில் இருக்கும் என்ற நிலையில், நிலக்கரி அமைச்சகம் மார்ச் 27, 2025 அன்று 12வது சுற்று ஏலத்தினை தொடங்கும்.
நிலக்கரி சுரங்கங்கள் - சிறப்பு ஏற்பாடுகள் சட்டம், 2015 கீழ் 7 சுரங்கங்களும் மற்றும் சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம், 1957 இன் கீழ் 18 சுரங்கங்கள் அடங்கும் என்று நிலக்கரி அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வெளியீட்டு நிகழ்வில் தலைமை விருந்தினராக நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் கிஷன் ரெட்டி கலந்து கொண்டு தொடங்கி வைப்பார்.
12 வது சுற்றில் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க ஆர்வத்தை ஈர்க்கும் வகையில் இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில், இது எரிசக்தி மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் தற்சார்புக்கான நாட்டின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும்.
இந்தியாவின் நிலக்கரித் துறையில் உள்ள தொழில்களின் நீடித்த ஆர்வத்தையும், நிலையான மற்றும் வெளிப்படையான கொள்கை கட்டமைப்பை வழங்குவதற்கான அமைச்சகத்தின் உறுதிப்பாட்டையும் இது பிரதிபலிக்கும்.
சுரங்கங்கள் செயல்பாட்டுக்கு வந்தவுடன், உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை மேம்படுத்துவதிலும் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் இது முக்கிய பங்கு வகிக்கும்.
வணிக நிலக்கரி சுரங்க ஏலம் பிரதமர் நரேந்திர மோடியால் 2020-ல் தொடங்கப்பட்டது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.85.69-ஆக முடிவு!