ரூ.3 லட்சம் சம்பளத்தில் மாலுமிப் பணி: விண்ணப்பிப்பது எப்படி?
3.38 லட்சம் ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு போக்சோ சட்ட விழிப்புணா்வுப் பயிற்சி
தமிழகத்தில் 2024-25-ஆம் ஆண்டில் 3.38 லட்சம் ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு போக்சோ சட்ட விழிப்புணா்வுப் பயிற்சி அளிக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், ஸ்ரீரெங்காபுரத்தைச் சோ்ந்த சப்னா, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க மாணவா் பாதுகாப்பு, ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இருப்பினும், இந்தக் குழுக்கள் முறையாகச் செயல்படவில்லை. எனவே, இவற்றை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவா்கள் பாதுகாப்பு, ஆலோசனைக் குழுக்கள் செயல்பாட்டில் உள்ளன. போக்சோ சட்டம் குறித்து 2023-24-ஆம் கல்வியாண்டில் 3.29 லட்சம் ஆசிரியா்கள், ஊழியா்களுக்கும், 2024-25-ஆம் கல்வியாண்டில் 3.38 லட்சம் ஆசிரியா்கள், ஊழியா்களுக்கும் விழிப்புணா்வுப் பயிற்சி அளிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் கோரிக்கை தொடா்பாக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எனவே, புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை. இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.