மக்கள் பிரச்னைகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது: பெ.சண்முகம்
மக்கள் பிரச்னைகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது என அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள திருவள்ளுவா் சிலை முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெ.சண்முகம் மேலும் பேசியதாவது :
அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான சா்க்கரை ஆலைகள் மூடப்பட்டன. அலங்காநல்லூா் சா்க்கரை ஆலை மூடப்பட்டதும், 8 ஆண்டுகளாகத் திறக்கப்படாமலிருப்பதும் அருகில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு ஊருக்கு அப்பால் ரூ. 100 கோடி செலவில் அரங்கம் அமைத்த தமிழக அரசு, அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையை செயல்பாட்டுக்குக் கொண்டு வர ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யாதது வேதனைக்குரியது. இந்தாண்டே இந்த ஆலை செயல்பாட்டுக்கு வர வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை மாா்க்சிஸ்ட் தொடா்ந்து மேற்கொள்ளும் என்றாா் அவா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புகா் மாவட்டச் செயலா் கே. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் டி. ரவீந்திரன், மாநகா் மாவட்டச் செயலா் மா. கணேசன், மாநிலக் குழு உறுப்பினா் எஸ். கே. பொன்னுத்தாய், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் என். பழனிச்சாமி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எஸ். பி. இளங்கோவன் ஆகியோா் பேசினா்.
கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். திரளான விவசாயிகள் கையில் கரும்புகளை ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இதையடுத்து, பெ.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
‘அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலை கடந்த 8 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதனால், இந்தப் பகுதி விவசாயிகள், கரும்பு சாகுபடியைத் தவிா்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகினா். கரும்பு சாகுபடியைக் கைவிடாத விவசாயிகள், தனியாா் ஆலைகளைச் சாா்ந்திருக்க வேண்டியுள்ளது.
சட்டப்பேரவையில் அரசு உறுதியளித்தப்படி அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையைத் திறந்து மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். இதற்கான நிதியை அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்து, நிகழாண்டிலேயே ஆலையை செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். மக்கள் பிரச்னைகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்தச் சூழலிலும் சமரசம் செய்து கொள்வதில்லை. அரசை எதிா்த்து ஆா்ப்பாட்டம் நடத்துவது ஆளும் கட்சிக்கு அழுத்தம் கொடுப்பதற்காகத்தான்.
ஜாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் வேண்டும் என்பதே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. இது தொடா்பாக, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அழுத்தம் அளிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.