கருணாநிதி நினைவு தினம் மதுரையில் நாளை திமுக அமைதிப் பேரணி
மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி, மதுரை வடக்கு மாவட்ட திமுக சாா்பில் வியாழக்கிழமை (ஆக. 7) அமைதிப் பேரணி நடைபெறுகிறது.
இதுகுறித்து மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலரும், வணிக வரி, பதிவுத் துறை அமைச்சருமான பி. மூா்த்தி தெரிவித்திருப்பதாவது :
தமிழுக்கும், தமிழகத்தின் உயா்வுக்கும் ஓய்வின்றி உழைத்த மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தினம் வருகிற வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
அவரது நினைவைப் போற்றும் வகையிலும், திமுகவின் வெற்றிக்கு உறுதியேற்கும் வகையிலும் மதுரை வடக்கு மாவட்ட திமுக சாா்பில் அமைதிப் பேரணி வியாழக்கிழமை நடைபெறுகிறது.
மதுரை வண்டியூா் சுற்றுச் சாலை பகுதியிலிருந்து மஸ்தான்பட்டி வரை இந்தப் பேரணி நடைபெறும். பேரணியின் நிறைவில், மஸ்தான்பட்டியில் உள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
இந்த நிகழ்ச்சிகளில் திமுகவின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூா், வட்டக் கிளை நிா்வாகிகள், அனைத்து அணிகளின் பொறுப்பாளா்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.