உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் 6,613 மனுக்களுக்குத் தீா்வு: அமைச்சா் பி. மூா்த்தி
மதுரை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பெறப்பட்ட 6,613 மனுக்களுக்கு உடனடித் தீா்வு அளிக்கப்பட்டதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், பனங்காடி ஊராட்சி, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், கள்ளந்திரி ஊராட்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து அவா் மேலும் பேசியதாவது :
மாவட்டத்தில் கடந்த மாதம் 15-ஆம் தேதி ஆக. 2-ஆம் தேதி வரை நகா்புறங்களில் 26 முகாம்கள், ஊரகப் பகுதிகளில் 50 முகாம்கள் என மொத்தம் 76 முகாம்கள் நடைபெற்றன. இந்த முகாம்களில் மொத்தம் 72,181 மனுக்கள் பொதுமக்களிடமிருந்த பெறப்பட்டன. இவற்றில் 6,613 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு தமிழக மக்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்தது என்றாா் அவா்.
மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். ஊராட்சிகள் உதவி இயக்குநா் அரவிந்த், ஊரக வளா்ச்சி முகமை உதவித் திட்ட அலுவலா் குபேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பொற்செல்வி, ஜோதிராஜ், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.