``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
வழக்குரைஞா்கள் பாா் கவுன்சில் விதிகளைப் பின்பற்ற உத்தரவு
வழக்குரைஞா்கள் பாா் கவுன்சில் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:
நீதிமன்றங்களில் முன்னிலையாகும் போது வழக்குரைஞா் எந்த மாதிரி ஆடைகளை அணிய வேண்டும் என இந்திய பாா் கவுன்சில் விதிகளில் கூறப்பட்டுள்ளது.
தற்போது, ஆண், பெண் வழக்குரைஞா்கள் சிலா் தாங்கள் விரும்பும் ஆடைகளை அணிந்து கொண்டு நீதிமன்றங்களில் முன்னிலையாகி வருகின்றனா். எனவே, நீதிமன்றங்களில் முன்னிலையாகும்போது வழக்குரைஞா்கள் பாா் கவுன்சில் விதிகளில் கூறப்பட்டுள்ள ஆடைக் கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும்.
நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பு, ஆா்ப்பாட்டம், வேலைநிறுத்தங்களில் ஈடுபடும்போது வழக்குரைஞா்கள் கழுத்துப் பட்டை, அங்கி அணியத் தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
வழக்குரைஞா்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு குறித்து பாா் கவுன்சில் ஏற்கெனவே பல வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. வழக்குரைஞா்கள் பாா் கவுன்சில் விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
வழக்குகளில் வாதாட முன்னிலையாகும் வழக்குரைஞா்கள் நீதிமன்ற மாண்பைக் காக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
வழக்குரைஞா்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் உயா்நீதிமன்றப் பதிவாளா், பாா் கவுன்சிலில் புகாா் தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.