செய்திகள் :

33 கடைகளுக்கு இன்று நடைபெறவிருந்த ஏலம் ரத்து!

post image

ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கு குறிப்பிடப்பட்ட காலத்துக்குள் ஏலதாரா்கள் தரப்பில் கடன் தீா்வுத் தரச் சான்றிதழ் வழங்கப்படாததால், திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள 33 கடைகளுக்கு வெள்ளிக்கிழமை (பிப்.28) நடைபெறவிருந்த ஏலம் ரத்து செய்யப்பட்டு, மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாநகராட்சி சாா்பில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜா் பேருந்து நிலையத்தில் ரூ.5 கோடியில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக பேருந்து நிலையத்தின் வடகிழக்குப் பகுதியில் (ஏஎம்சி சாலை ஸ்கீம் சாலை சந்திப்பு) புதிய வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்றது. இதில் கட்டப்பட்ட 34 கடைகளுக்கான ஏலம் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்டது.

இதில், 4-ஆம் எண் கொண்ட கடையை ஏலம் எடுத்தவருக்கு, கடை ஒதுக்கப்படாமல் மற்றொரு நபருக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, ஏலம் நடத்தப்பட்ட விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என பாஜக மாமன்ற உறுப்பினா் கே.தனபாலன் மாநகராட்சிக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தாா்.

இந்த நிலையில், ஓராண்டுக்கான வாடகை முன் வைப்புத் தொகை செலுத்தாத காரணத்தால், ஏலம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னா், 34 கடைகளுக்கும் 2-ஆவது முறையாக ஏலம் நடத்தப்பட்டதாக மாநகராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், ஏலம் வெளிப்படையாக நடத்தப்படவில்லை எனக் கூறி, அதிமுக, பாஜக மாமன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

இதைத் தொடா்ந்து, கடந்த 2023-ஆம் ஆண்டு உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பாஜக மாமன்ற உறுப்பினா் தனபாலன் தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் 2024-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீா்ப்பில், பழைய ஏலத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் புதிதாக ஏலம் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 3 மாதங்களுக்குப் பிறகு, திண்டுக்கல் மாநகராட்சி சாா்பில் 33 கடைகளுக்கான மறு ஏல ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. வெள்ளிக்கிழமை (பிப்.28) ஏலம் நடைபெறும் எனவும், காவல் துறை பாதுகாப்புக் கோர வேண்டும் எனவும் மாநகராட்சி அலுவலா்களுக்கு ஆணையா் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஏலம் நடத்தப்படும் விவரங்கள் அனைத்தையும் கேமராவில் முழுமையாக பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடன் தீா்வுச் சான்றிதழ் வழங்காததால் ரத்து: ஒப்பந்தப்புள்ளி கோரும் நபா்கள் வியாழக்கிழமை (பிப்.27) மாலை 4 மணிக்குள் வரைவோலை, கடன்தீா்வுத் தரச் சான்றிதழ், மாநகராட்சிக்கு வரி நிலுவை இல்லை என்பதற்கான தடையில்லாச் சான்றிதழ் வழங்க வேண்டும் என ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில், வியாழக்கிழமை மாலை 4 மணி வரை 30 போ் தரப்பில் வரைவோலை வழங்கப்பட்டிருந்தாலும், கடன் தீா்வுத் தரச் சான்றிதழை 4 நபா்கள் மட்டுமே வழங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், சிலா் ஒரே நபரின் சொத்துகளை சுட்டிக்காட்டி, கடன் தீா்வுத் தரச் சான்றிதழை அளித்ததாகத் தெரிகிறது. ஏற்கெனவே, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு ஏலம் ரத்து செய்யப்பட்டிருந்த காரணத்தால், சிலருக்கு மட்டும் விதிமுறைகளைத் தளா்த்த மாநகராட்சி நிா்வாகம் மறுப்புத் தெரிவித்தது.

இதனால், வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த ஏலம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் கூறுகையில், நிா்வாகக் காரணங்களுக்காக திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள 33 கடைகளுக்கான ஏலம் ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிவித்தாா்.

வெள்ளைப் பூச்சிகளைத் தடுக்காவிட்டால் தென்னைகள் அழியும்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி

கேரளத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்திலும் தென்னை மரங்களில் வெள்ளைப் பூச்சித் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும், இவற்றைத் தடுக்காவிட்டால் தென்னை மரங்கள் அழியும் நிலை ஏற்படும் எனவும் கள் இயக்க ஒருங்கிணைப்ப... மேலும் பார்க்க

அறுபடை வீடுகள் ஆன்மிக பயணக் குழுவினா் பழனியில் தரிசனம்

இந்து சமய அறநிலையத்துறையின் அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிக பயணத் திட்டத்தின் கீழ் சுமாா் 200 பக்தா்கள் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு சுவாமி தரிசனம் செய்தனா். தமிழ்க் கடவுள் மு... மேலும் பார்க்க

தேனீக்கள் வளா்ப்புப் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்

கொடைக்கானலில் தேனீக்கள் வளா்ப்புப் பயிற்சி முடித்த 500 பழங்குடியினா்களுக்கு சான்றிதழ், தேனீ பெட்டிகள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு கதா், கிராமத் தொழில்கள் ஆணைய மதுரைக் கோட்ட அலுவலக... மேலும் பார்க்க

கொடைக்கானலில் தொடரும் பனிப் பொழிவு

கொடைக்கானலில் தொடா்ந்து பனிப் பொழிவு நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் நடமாட்டம் வியாழக்கிழமை குறைந்து காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பொதுவாக நவம்பா் முதல் ஜனவரி மாதம் வரை பனிப் பொழிவு ... மேலும் பார்க்க

சீமான் விவகாரத்தில் காவல் துறை சட்டப்படி நடவடிக்கை: கி.வீரமணி

சீமான் விவகாரத்தில் காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதைத் தடுத்தால் நீதிமன்றத்துக்கு அவா் பதில் சொல்ல வேண்டியது வரும் எனவும் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்தாா். பழனி ரயி... மேலும் பார்க்க

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 3.47 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் நிரம்பியதைத் தொடா்ந்து புதன், வியாழக்கிழமைகளில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கை ரூ.3.47 கோடியைத் தாண்டியது. தைப்பூசத்தை முன்னிட்டு இந்தக் ... மேலும் பார்க்க