39 வயதில் ஐசிசி ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடம்! சிக்கந்தர் ராஸா அசத்தல்.!
ஐசிசி ஒருநாள் போட்டிக்கான ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்து 39 வயதான ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராஸா அசத்தியுள்ளார்.
ஐசிசியின் தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடப்படும். அதன்படி, இந்தவாரத்துக்கான ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியல் இன்று (செப்.3) வெளியிடப்பட்டது.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இரண்டுப் போட்டிகளிலும் அபார வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரை வென்றது.
இந்தத் தொடரின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராஸா, இரண்டு இன்னிங்ஸ்கள் முறையே 92 மற்றும் 59 ரன்கள் விளாசினார். மேலும், பத்து ஓவர்கள் பந்துவீசி 40 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இதன்மூலம், ஐசிசியின் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் சிக்கந்தர் ராஸா 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இது அவருக்கு சிறந்த தரநிலையாகும்.
நியூசிலாந்தின் சாண்டனர், ஆப்கானிஸ்தானின் ரஷீத்கான் இருவரும் ஒரு இடங்கள் முன்னேறியுள்ளனர். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 9-வது இடத்தில் உள்ளார்.
ஐசிசி ஒருநாள் ஆல்ரவுண்டர் தரவரிசை
சிக்கந்தர் ராஸா - 302 புள்ளிகள்
அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் - 296 புள்ளிகள்
முகமது நபி - 292 புள்ளிகள்
மெஹதி ஹசன் மிராஸ் - 249 புள்ளிகள்
மிட்செல் பிரேஸ்வெல் - 246 புள்ளிகள்
மிட்செல் சாண்டனர் - 238 புள்ளிகள்
ரஷீத்கான் - 238 புள்ளிகள்
பிரண்டன் மக்முல்லன் - 235 புள்ளிகள்
ரவீந்திர ஜடேஜா - 220 புள்ளிகள்
ரச்சின் ரவீந்திரா - 216 புள்ளிகள்