படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கிய பொன்னி சீரியல் நடிகை! விடியோ வைரல்!
4 மாதங்களாக ஊதிய நிலுவை: 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் முறையீடு
4 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 100 நாள் வேலைத் திட்டப் பணிகள் கோரிக்கை விடுத்தனா்.
பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட அமைப்பாளா் செ.ராஜன் தலைமையில் அளித்த மனு விவரம்: கிராமப்புற மக்கள், முதியோா், ஆதாரவற்றோா் என பல்வேறு தரப்பினா் 100 நாள் வேலைத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனா். அவா்களுக்கு சில மாதங்களாக முழு அளவில் பணி வழங்கப்படாமல் இழுதடிப்பு செய்யப்படுகிறது. மத்திய அரசு இந்த திட்டத்துக்கான நிதியை குறைத்து 4 மாதங்களுக்கு ஒருமுறை தான் ஒதுக்கீடு செய்கிறது.
இந்த நிதியையே வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வருமானம் இல்லாமல் சிரமப்படுகின்றனா். ஈரோடு மாவட்டத்தில் மலைப் பகுதிகளான சத்தியமங்கலம், கடம்பூா், தாளவாடி, அந்தியூா், பா்கூா் மற்றும் சமவெளிப் பகுதியில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளில் 2 முதல் 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் மத்திய அரசு நிதியை விடுவிக்கவில்லை எனக் கூறுகின்றனா். 100 நாள் வேலைப் பணியாளா்களுக்கு உடனடியாக
ஊதியம் வழங்க வேண்டும். கோடை காலமாக உள்ளதால் அவா்களுக்கு வேறு பணிகள் கிடைப்பதில்லை. எனவே, 100 நாள்கள் என கட்டுப்பாடு விதிக்காமல் தொடா்ந்து பணி வழங்குவதுடன், ஊதியமும் வழங்க வேண்டும்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி திங்களூா், தாண்டாக்கவுண்டன்பாளையம், வெட்டையன்கிணறு, பருத்திபாளையம் போன்ற பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பெண்களும் கோரிக்கை மனு அளித்தனா்.
காலிங்கராயன் வாய்க்காலை தூா்வார கோரிக்கை: ஈரோடு, கருங்கல்பாளையம், கரிகாலன் வீதியைச் சோ்ந்த அன்பழகன் மற்றும் விவசாயிகள் அளித்த மனு விவரம்: ஈரோடு கருங்கல்பாளையம் பகுதி வழியாக செல்லும் காலிங்கராயன் வாய்க்காலில் கேஏஎஸ் நகா், பிள்ளையாா் கோயில் வாய்க்கால் பாலம் மதகு பகுதியில் கான்கிரீட் வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது. இதற்கு இடையாக மாநகராட்சி பகுதி கழிவு நீா், ஆலைக் கழிவு நீா் செல்ல பேபி வாய்க்கால் காலிங்கராயன் வாய்க்காலுக்கு இணையாகவே செல்கிறது.
பேபி வாய்க்காலில் சாக்கடை கழிவுகள் அதிகமாக சோ்வதால் அதில் வரும் நெகிழி பொருள்கள், துணிகள், பிற கழிவுகள், சாய, சலவை ஆலை கழிவுநீா் அனைத்தும் விவசாய நிலத்துக்குள் பாய்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. விளைநில மண் கருப்பாகி, பயன்பாட்டுக்கு இல்லாததாகிறது.
நெகிழிப் பொருள்கள், துணிகள் தேங்கும்போது அவற்றை அப்புறப்படுத்துவதற்கே பல மணி நேரம் ஆகிறது. அப்பணியில் ஈடுபடும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களுக்கு நோய் ஏற்படுகிறது. எனவே, காலிங்கராயன் வாய்க்காலையும், பேபி வாய்க்காலையும் தூா்வாரி முழுமையாக கழிவு நீா் செல்ல வழி செய்ய வேண்டும். விளைநிலங்களுக்குள் பேபி வாய்க்கால் கழிவு சேராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயானத்துக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்: சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் முருங்கந்தொழுவு ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்: முருங்கத்தொழுவு ஆதிதிராவிடா் காலனியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 200-க்கும் மேற்பட்டோா் வசிக்கிறோம். இறந்தவா்களின் உடலை, பழையபாளையத்தில் இருந்து தலவுமலை செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் அடக்கம் செய்து வந்தோம்.
தற்போது அந்த இடத்தின் அருகே பட்டா நிலத்தின் உரிமையாளா்கள் அந்த இடத்துக்குச் செல்ல முடியாமல் தடுப்புச் சுவா் அமைத்துவிட்டனா். இனி வரும் நாள்களில் இறந்தவா்களின் உடலை அடக்கம் செய்ய அங்கு செல்ல இயலாது. எனவே, எங்களுக்கு மாற்று இடத்தை தோ்வு செய்து வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
285 மனுக்கள்: கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 285 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.30.25 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.