4.9 டன் ரேஷன் அரிசி கடத்தல்: 4 போ் கைது
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே வாகனங்களில் கடத்தப்பட்ட 4,900 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, பெண் உள்பட 4 பேரை கைது செய்தனா்.
காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூா், புதுவயல் பகுதிகளில் அதிக அளவில் அரிசி ஆலைகள் உள்ளன. இங்குள்ள ஆலைகளுக்கு சில நபா்கள் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளா் ஆஷிஷ் புனியாவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரது தலைமையிலான தனிப்படை காவல் துறையினா் இரவு முழுவதும் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, திருப்பத்தூா் அச்சுக்காடு பகுதியிலிருந்து வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 300 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது. அதன் ஓட்டுநா் நாகராஜ் (28) என்பவரை போலீஸாா் கைது செய்து, சரக்கு வாகனம், ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனா்.
இதே போல, காரைக்குடி கழனிவாசல் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் ரேவதி (36) என்பவா் ஓட்டி வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 300 கிலோ ரேஷன் அரி கடத்தப்பட்டது தெரியவந்தது. ரேஷன் அரிசி, ஆட்டோவை போலீஸாா் பறிமுதல் செய்து, ரேவதியைக் கைது செய்தனா். மற்றொரு பகுதியில் மேற்கொண்ட வாகனச் சோதனையில் காளையாா்கோவில் பகுதியிலிருந்து
வந்த சரக்கு வாகனத்தில் 300 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது. போலீஸாா் ரேஷன் அரிசி, சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து ஓட்டுநா் செல்லப்பாண்டியைக் (37) கைது செய்தனா். மேலும், பள்ளத்தூா் பகுதியில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 4,000 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் கைப்பற்றினா். இந்த வாகன ஓட்டுநரான மதுரையைச் சோ்ந்த சந்தோஷ் (19) என்பவரை போலீஸாா் கைது செய்து, ரேஷன் அரிசி, சரக்கு வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.