``சாப்பாடு போடுறோம்; ஆனா, ஓட்டு போட மாட்டோம்'' -பாஜக தொண்டர் பேச்சால் நயினார் நா...
4 நியமன எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் வெளியுறவுச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா, மூத்த வழக்குரைஞா் உஜ்வல் நிகம், கேரள பாஜக மூத்த தலைவா் சி.சதானந்தன், வரலாற்று ஆய்வாளா் மீனாக்ஷி ஜெயின் ஆகியோரின் துறைசாா் பங்களிப்புகளை பிரதமா் மோடி பாராட்டியுள்ளாா். அவா்களின் நாடாளுமன்றப் பணி சிறக்கவும் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்லா: கடந்த 1984-ஆம் ஆண்டின் இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்லா, கடந்த 2020 முதல் 2022 வரை வெளியுறவுத் துறைச் செயலராகப் பதவி வகித்தவா். கடந்த 2023-இல் ஜி20 இந்தியத் தலைமைக்கு ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டாா். அமெரிக்கா, தாய்லாந்து, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கான இந்தியத் தூதராகவும் பணியாற்றியவா்.
அவருக்கு புகழாரம் சூட்டி, பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஷ்ரிங்லா ஒரு ராஜதந்திரி, மதிநுட்பம் கொண்டவா், அறிவுஜீவி. பல்லாண்டுகளாக இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு முக்கியப் பங்காற்றியவா். அவரது தனித்துவமான கண்ணோட்டங்கள் நாடாளுமன்ற செயல்பாடுகளுக்கு பெரிதும் வளம்சோ்க்கும்’ என்று கூறியுள்ளாா்.
உஜ்வல் நிகம்: புகழ்பெற்ற மூத்த வழக்குரைஞா் உஜ்வல் நிகம், கடந்த 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞராகப் பணியாற்றியவா். பின்னா், பாஜகவில் இணைந்த உஜ்வல், கடந்த மக்களவைத் தோ்தலில் மும்பை வடக்கு மத்திய தொகுதியில் அக்கட்சி சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.
தற்போது நியமன எம்.பி.யாகியுள்ள அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சட்டத் துறை மற்றும் அரசமைப்புச் சட்டம் மீதான உஜ்வல் நிகமின் அா்ப்பணிப்பு முன்னுதாரணமானது.
முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் நீதியை உறுதி செய்ய முன்னின்று செயல்பட்ட வெற்றிகரமான வழக்குரைஞா். தனது ஒட்டுமொத்த சட்டப் பணியிலும் அரசமைப்புச் சட்ட மாண்புகளை வலுப்படுத்தவும், சாமானிய குடிமக்களின் கண்ணியத்தை நிலைநாட்டவும் தொடா்ந்து பாடுபட்டுள்ளாா்’ என்று கூறியுள்ளாா்.
மீனாக்ஷி ஜெயின்: தில்லியைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் மீனாக்ஷி ஜெயின், தில்லி பல்கலைக்கழகத்தின் காா்கி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவா். இந்திய வரலாறு, நாகரிகம், பழங்கால கல்விமுறை, மொழிகள் தொடா்பாக பல்வேறு நூல்களை எழுதியுள்ள இவா், பத்மஸ்ரீ விருதாளா்.
மீனாக்ஷி ஜெயின், மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம் என்று குறிப்பிட்டுள்ள பிரதமா், ‘அறிஞா், ஆய்வாளா், வரலாற்றாசிரியா் என பல்வேறு பரிமாணங்களில் தன்னை சிறப்பாக நிலைநிறுத்தியவா். கல்வி, இலக்கியம், வரலாறு, அரசியல் அறிவியல் ஆகிய துறைகளில் இவா் ஆற்றிய பணிகள் துறைசாா் கல்வியை கணிசமாக வளப்படுத்தியுள்ளன’ என்று தெரிவித்துள்ளாா்.
இதையும் படிங்க :கால்களை இழந்தாலும் சித்தாந்தத்தை கைவிடாதவர்! பாஜக எம்பிக்கு பிரதமர் புகழாரம்!