``ஆண்களுக்கான கேன்சர் பரிசோதனை; இனி வீட்டிலேயே செய்யலாம்'' - ஆராய்ச்சியாளர்கள் ச...
6 நாள்களுக்குப் பிறகு நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்
6 நாள்களுக்குப் பிறகு, நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கப்பட்டது.
நாக்பூரில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து, கோட்வாலி, கணேஷ்பேத், தேஷில், லகட்கஞ்ச், பச்பாலி, சாந்தி நகர், சக்கர்தாரா, நந்தன்வன், இமாம்பாடா, யசோதரா நகர் மற்றும் கபில் நகர் காவல் நிலையப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மார்ச் 20ஆம் தேதி நந்தன்வன் மற்றும் கபில் நகர் காவல் நிலையப் பகுதிகளிலும், மார்ச் 22 அன்று பச்பாலி, சாந்தி நகர், லகட்கஞ்ச், சக்கர்தாரா மற்றும் இமாம்பாடா பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது.
நாக்பூர் காவல் ஆணையர் ரவீந்தர் சிங்கால் ஞாயிற்றுக்கிழமை மீதமுள்ள கோட்வாலி, தேஷில், கணேஷ்பேத் மற்றும் யசோதரா நகர் காவல் நிலையப் பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் ஊரடங்கு உத்தரவை நீக்க உத்தரவிட்டார். அதேசமயம் உள்ளூர் காவல்துறையினரின் உதவியுடன், பதட்டமான பகுதிகளில் ரோந்துப் பணி தொடரும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
திருமணமாகாத நக்ஸல்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி! சத்தீஸ்கர் அமைச்சரவை ஒப்புதல்
மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வலியுறுத்தி முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸின் சொந்த ஊரான மத்திய நாக்பூரியின் சிட்னிஸ் பூங்கா பகுதியில், விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மார்ச் 17 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் சிறுபான்மை சமூகத்தின் புனித நூல் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு அமைப்புகளுக்கு இடையிலான மோதல் ஒருகட்டத்தில் வன்முறையாக மாறியது. இதில் வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதனைத் தடுக்க வந்த காவல் துறையினர் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதால், அவர்களைத் தடியடி நடத்தி காவல் துறையினர் கலைத்தனர்.
இதில், காவலர்கள் உள்பட பலர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.