7-வது நாளாக விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம்! ரூ. 250 கோடி உற்பத்தி பாதிப்பு!
விசைத்தறியாளர்கள் தொடர்ந்து ஏழாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ரூ. 250 கோடி மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் விசைத்தறிக்கு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் மற்றும் கூலி உயர்வினை வழங்க வேண்டும் எனக் கூறி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று தொடர்ந்து ஏழாவது நாளாக விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பாஜகவுடன் கூட்டணியா? தில்லிக்கு படையெடுக்கும் அதிமுக தலைவர்கள்!
இதனை அடுத்து இன்று(மார்ச் 25) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறி சங்கங்கள் கூட்டமைப்பு மற்றும் அரசு தரப்பில் கோவை மாவட்ட ஆட்சியர் உடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு கூலி உயர்வு வழங்குவது குறித்து பேசினால் இந்த வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வரும்.
இதனால் நாளொன்றுக்கு ரூ. 35 கோடி ரூபாய் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஏழாவது நாளாக சுமார் ரூ. 250 கோடிக்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் பேச்சு வார்த்தையின் முடிவில் வேலை நிறுத்த போராட்டத்தின் அடுத்த கட்டத்தை முடிவு செய்யப்படும் என கூலிக்கு நெசவு செய்யும் தரி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பூபதி தெரிவித்தார்.