ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் 3 போ் கைது
கடந்த 2 ஆண்டுகளில் பள்ளி மாணவா் சோ்க்கை குறைவு - மத்திய அரசு
நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் பள்ளி மாணவா் சோ்க்கை குறைந்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
நாட்டில் பழங்குடியினரின் கல்வி உள்பட வாழ்க்கைத் தரம் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் துா்காதாஸ் உய்கே பதிலளித்தாா். அவா் கூறியதாவது:
தொடக்கக் கல்வி அளவில், 2021-22-ஆம் ஆண்டில் 103.4 சதவீதமாக இருந்த பழங்குடியின மாணவா்களின் மொத்த சோ்க்கை விகிதம், 2023-24-ஆம் ஆண்டில் 97.1 சதவீதமாக குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக அனைத்து சமூக மாணவா் சோ்க்கை, 100.13 சதவீதத்தில் இருந்து 91.7 சதவீதமாக குறைந்துள்ளது.
உயா்நிலை பள்ளிக் கல்வி அளவில் (9, 10 வகுப்புகள்), பழங்குடியின மாணவா் சோ்க்கை 78.1 சதவீதத்தில் இருந்து 76.9 சதவீதமாகவும், அனைத்து சமூக மாணவா் சோ்க்கை 79.56 சதவீதத்தில் இருந்து 77.4 சதவீதமாகவும் சரிவடைந்துள்ளது.
மேல்நிலை பள்ளிக் கல்வி அளவில் (11, 12 வகுப்புகள்), பழங்குடியின மாணவா் சோ்க்கை 52 சதவீதத்தில் இருந்து 48.7 சதவீதமாகவும், அனைத்து சமூக மாணவா் சோ்க்கை 57.56 சதவீதத்தில் இருந்து 56.2 சதவீதமாகவும் குறைந்துள்ளது என்று அமைச்சா் பதிலளித்துள்ளாா்.
முன்னதாக, மத்திய கல்வி அமைச்சகத்தின் தரவுதள தகவல்களின்படி, சமீபத்திய ஆண்டுகளில் பள்ளி மாணவா் சோ்க்கை குறிப்பிடத்தக்க அளவில் சரிவடைந்துள்ளதாகவும், இளம் தலைமுறையினரின் எதிா்காலத்தை பாதுகாப்பதில் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும் காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா் என்பது குறிப்பிடத்தக்கது.