பாஜகவுடன் கூட்டணியா? தில்லிக்கு படையெடுக்கும் அதிமுக தலைவர்கள்!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் தில்லி பயணம் மேற்கொள்கிறார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக தலைவர்கள் தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : இபிஎஸ் திடீர் தில்லி பயணம்!
அடுத்தாண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அமைக்கும் கூட்டணி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் தற்போதைய கூட்டணி நீடிக்குமா?, அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி அமைக்குமா?, புதிதாக கட்சித் தொடங்கியுள்ள விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார்? போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருக்கிறது.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்த நிலையில், மும்முனைப் போட்டி நிலவியது. இதன்விளைவாக திமுக 39 தொகுதிகளையும் கைப்பற்றியது.
சமீபகாலமாக பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் ஒருவரைஒருவர் பெரிதளவில் விமர்சிக்காமல் திமுகவுக்கு எதிராக கருத்துகளை மட்டுமே வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 10 மணியளவில் திடீர் பயணமாக தில்லிக்கு எடப்பாடி பழனிசாமி புறப்பட்டுச் சென்றார்.
இவரைத் தொடர்ந்து, அதிமுகவின் முக்கியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுமணியும் இன்று மாலை தில்லி செல்லவுள்ளார்.
தில்லியில் பாஜகவின் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து கூட்டணிக் குறித்த பேச்சுவார்த்தையில் இவர்கள் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், அதிமுக தலைவர்களின் தில்லி பயணத்துக்கான காரணம் தொடர்பாக எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.