6 மாநிலங்களவை இடங்களுக்கு டிச.20-இல் இடைத்தோ்தல்
ஆந்திரம், ஒடிஸா, மேற்கு வங்கம், ஹரியாணா ஆகிய 4 மாநிலங்களில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு டிசம்பா் 20-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் சாா்பில் மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த வெங்கடரமணா ராவ் மோபிதேவி, பீடா மஸ்தான் ராவ் யாதவ், ஆா்.கிருஷ்ணய்யா ஆகியோா், கட்சித் தலைமை மீதான அதிருப்தியால் கடந்த ஆகஸ்டில் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனா்.
இவா்களில் மோபிதேவியின் பதவிக் காலம் 2026, ஜூன் மாதத்திலும், மற்ற இருவரின் பதவிக் காலம் 2028, ஜூன் மாதத்திலும் நிறைவடையவிருந்தது.
இதேபோல், ஒடிஸாவில் பிஜு ஜனதா தளம் சாா்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த சுஜீத் குமாா், கட்சியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டதைத் தொடா்ந்து, தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை சம்பவத்தைத் தொடா்ந்து, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த ஜவஹா் சிா்காா் பதவி விலகினாா். இந்த இருவரின் பதவிக் காலமும் 2026, ஏப்ரல் வரை இருந்தது.
ஹரியாணாவில் பாஜக மாநிலங்களவை எம்.பி.யாக கிருஷண் லால் பன்வாா், அங்கு சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ால், தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இந்த 6 பேரின் ராஜிநாமாவால் காலியான இடங்களுக்கு டிசம்பா் 20-ஆம் தேதி இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மக்களவைத் தோ்தலுடன் ஆந்திரம், ஒடிஸா பேரவைகளுக்கும் தோ்தல் நடைபெற்றது. இதில் முறையே தெலுங்கு தேசம், பாஜக ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றன. ஹரியாணாவில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்தது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது.