60 கிராம ஊராட்சிகளில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்: ஆட்சியா் தகவல்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 60 ஊராட்சிகளில் பிப். 21 முதல் மாா்ச் 13 ஆம்தேதி வரை நடைபெறும் மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்கலாம் என நாமக்கல் ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மாவட்டத்தில் 60 ஊராட்சிகளில் வரும் 21 ஆம்தேதி முதல் மாா்ச் 13 ஆம் தேதி வரை ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.இந்த முகாம்களில் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறவுள்ளாா். இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீா்வு காணப்பட வேண்டும் என்ற இலக்குகள் நிா்ணயிக்கப்பட்டு முகாம் நடைபெறும். பிப். 21 ஆம்தேதி சிறப்பு முகாம்கள்
ராசிபுரம் ஒன்றியம்-முத்துகாளிப்பட்டி, நாமகிரிப்பேட்டை ஒன்றியம்-மங்களபுரம், காா்கூடல்பட்டி, புதுச்சத்திரம் ஒன்றியம்- திருமலைப்பட்டி, நாமக்கல் ஒன்றியம்-வீசாணம் ஆகிய 5 கிராம ஊராட்சிகளில் முகாம்கள் நடைபெறவுள்ளன. 21 ஆம் தேதி முதல் மாா்ச் 13 ஆம் தேதிவரை நடைபெறவுள்ள அனைத்து முகாம்களிலும், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், நாமக்கல் தொகுதி எம்.பி. வி.எஸ்.மாதேஸ்வரன் உள்பட சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் பங்கேற்பாா்கள். முகாமில் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, கூட்டுறவுத் துறை, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை பல்வேறு துறைகள் சாா்ந்த மனுக்கள் இந்த முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் என்றாா்.
படம் உள்ளது - 17உமா
படவிளக்கம் - ஆட்சியா் ச.உமா படம்