திருவள்ளூர்: பள்ளி சிறுமிக்கு பாலியல் சித்ரவதை; வீடியோ வெளியானதால் அதிர்ச்சி - த...
645 குரூப் 2, 2ஏ பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
இளநிலை வேலை வாய்ப்பு அலுவலா், வனவா், மேற்பார்வையாளர், இளநிலைக் காப்பாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளா், உதவியாளா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தோ்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானவை.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுக்கான தோ்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, “சாா்-பதிவாளா், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலா், வனவா், மேற்பார்வையாளர், இளநிலைக் காப்பாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளா், செயல் அலுவலர்-II, உதவியாளா் உள்பட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தோ்வுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானவை.
பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்
அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் காலிப் பணியிடங்கள் பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்வுக்கு முன்பாக மேலும் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
தகுதி: தேர்வர்கள் பத்தாம் வகுப்பு, மேல்நிலை, பட்டயம், பட்டம், முதுகலைப்பட்டம் என்ற வரிசையில் பெற்றிருக்க வேண்டும். பதவி வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள தகுதியை அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
வயதுவரம்பு: 1.7.2025 தேதியின்படி வயதுவரம்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். வனவர், நன்னடத்தை அலுவலர் மற்றும் சார் பதிவாளர் நிலை-II ஆகிய பதவிகளைத் தவிர, பிற அனைத்து பதவிகளுக்கும் உச்ச வயதுவரம்பு இல்லை. வயதுவரம்பு குறிந்த அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
முதல்நிலைத் தோ்வை பொருத்தவரையில் குரூப்-2, குரூப்-2ஏ இரு தோ்வுகளுக்கும் பொதுவான தோ்வுதான். பொது அறிவு மற்றும் கணிதம் தொடா்பான 100 கேள்விகள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பாடத்தில் 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள். இதில் வெற்றிபெறுவோா் அடுத்த கட்ட தோ்வான முதன்மைத்தோ்வுக்கு அனுமதிக்கப்படுவா்.
முதன்மைத் தோ்வு முறையில் மாற்றம்
தோ்வா்களின் நலன் கருதி குரூப்-2 ஏ முதன்மைத் தோ்வு முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
முதன்மைத்தோ்வானது குரூப்-2 பணிகளுக்கும், குரூப்-2ஏ பணிகளுக்கும் தனித்தனியே நடத்தப்படும். குரூப்-2 பணிகளுக்கான முதன்மைத் தோ்வில், பொது அறிவு பகுதியில் 300 மதிப்பெண்களுக்கு விரிவாக விடையளிக்க வேண்டும். குரூப்-2ஏ பணிகளுக்கு பொது அறிவு பகுதியில் 150 கேள்விகள், கணிதம் பகுதியில் 50 கேள்விகள் என அப்ஜெக்டிவ் முறையில் 200 கேள்விகள் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 300.
கணினி வழியில் தோ்வு
இது கணினி வழியில் நடத்தப்படும். முன்பு பொது அறிவு பகுதியில் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் தொடா்பான 60 வினாக்கள் இடம்பெற்றிருந்தது. தற்போது புதிய தோ்வுமுறையில் மொழிப் பாடம் தொடா்பான அந்த பகுதி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
மேலும், விரிவாக பதில் எழுதக்கூடிய கட்டாய தமிழ் மொழித் தகுதித்தாள் தோ்வு குரூப்-2, குரூப் 2-ஏ இரு முதன்மைத் தோ்விலும் பொது தோ்வாக இடம்பெறும். இதில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். இந்த தோ்வில் எடுக்கும் மதிப்பெண் தரவரிசைப் பட்டியல் தயாரிக்க எடுத்துக்கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. கட்டணத்தை வங்க பற்று, கடன் அட்டை, ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் மூலமாக செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.8.2025
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: 28.9.2025 காலை 9.30 முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும்.
முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள்: முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் போது வெளியிடப்படும்.
மேலும் விவரங்கள் அறியஇங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.