7 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வியாழக்கிழமை சென்னை, மதுரை உள்பட 7 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகரம் - 102.92, கடலூா் - 100.94, பரங்கிப்பேட்டை - 100.76, திருச்சி - 100.58, சென்னை மீனம்பாக்கம் - 100.22, ஈரோடு - 100.04 டிகிரி என மொத்தம் 7 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
தமிழகத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜூன் 20, 21) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
மிதமான மழை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) முதல் ஜூன் 25-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும் அதிகபட்ச வெப்பநிலை 100.4 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 70 மி.மீ. மழை பதிவானது. சின்கோனா (கோவை), மேல் கூடலூா் (நீலகிரி), வால்பாறை (கோவை), நடுவட்டம் (நீலகிரி), உபாசி (கோவை) தலா 50 மி.மீ. மழை பதிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.