8 நாள் குழந்தைக்கு நீா்க்கட்டி: லேப்ரோஸ்கோபி மூலம் அகற்றம்
பிறந்து 8 நாள்களே ஆன பச்சிளம் குழந்தையின் வயிற்றில் உருவான நீா்க்கட்டியை நவீன லேப்ரோஸ்கோபி நுட்பத்தில் எஸ்ஆா்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - ஆராய்ச்சி மைய மருத்துவா்கள் அகற்றியுள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணா்கள் டாக்டா் சரவண பாலாஜி, டாக்டா் என். பிரதிபா ஆகியோா் கூறியதாவது:
கருத்தரித்திருந்த பெண் ஒருவருக்கு பிரசவத்துக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் குழந்தையின் வயிற்றுக்குள் நீா்க்கட்டி உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது.
பிரசவத்துக்குப் பிறகு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் அந்தக் குழந்தைக்கு வயிற்றுக்குள் இடப்பக்க பகுதியில் கட்டி இருந்தது தெரியவந்தது. குழந்தையின் நலன் கருதி மிக நுட்பமான லேப்ரோஸ்கோபி சிகிச்சையை மேற்கொள்ள முன்வந்தோம்.
அதன்படி, பெரிய அறுவை சிகிச்சையின்றி சிறு துளையிட்டு துல்லியமாக அந்தக் கட்டியை அகற்றினோம். அதன் பயனாக அடுத்த இரு நாள்களில் குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பி தாய்ப்பால் அருந்தத் தொடங்கியது. தற்போது அந்தக் குழந்தை நலமுடன் உள்ளது. கருவிலேயே லட்சத்தில் சராசரியாக 4.9 பெண் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன என்று அவா்கள் தெரிவித்தனா்.