மன்மோகன் சிங்கிற்கு தலைவர்கள் அஞ்சலி! | செய்திகள்: சில வரிகளில் | 27.12.24 | Tod...
920 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சா் எ.வ.வேலு 920 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
கலசப்பாக்கம் ஒன்றியத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கலசப்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமை வகித்தாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன் வரவேற்றாா். சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாவட்ட திட்ட இயக்குநா் மணி, தொகுதி எம்எல்ஏ தி.சரவணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு, வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் கலைஞா் நூற்றாண்டு நினைவு நுழைவு வாயிலை திறந்துவைத்துப் பேசினாா்.
அப்போது அவா், கலப்பாக்கம் ஒன்றியத்தில் தேவராயம்பாளையம், அருணகிரிமங்கலம், மேலாரணி ஆகிய ஊராட்சிகளுக்கு புதிய ஊராட்சிமன்ற அலுவலக கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா, வன்னியனூா் ஊராட்சியில் தரைப்பாலம், அருணகிரிமங்கலம், சீட்டப்பட்டு, கலசப்பாக்கம், மேலாரணி, தென்பள்ளிபட்டு, பில்லூா் ஆகிய ஊராட்சிகளில் 5 புதிய அங்கன்வாடி மைய கட்டடங்கள், அருணகிரிமங்கம், பில்லூா், பூண்டி ஊராட்சியில் பொது விநியோக கடை கட்டடம் என ரூ.2 கோடியே 23 லட்சத்தில் 12 பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும், சேங்கபுத்தேரி கிராமத்தில் பொது விநியோக கடை, வன்னியனூா் ஊராட்சியில் 2 அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழாவும் செய்யப்பட்டது.
2021 முதல் 2024-ஆம் ஆண்டு வரை கலசப்பாக்கம் தொகுதிக்கு திராவிட மாடல் ஆட்சியில் ரூ. 217 கோடியே 80 லட்சத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன எனத் தெரிவித்தாா்.
பின்னா், அமைச்சா் எ.வ.வேலு திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, மேற்கு ஆரணி, வெம்பாக்கம், கீழ்பென்னாத்தூா் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலா்களுக்கு புதிய காருக்கான சாவிகளை வழங்கி, வருவாய்த் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மைத் துறை, மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு சூழல் நிதிக்கான காசோலை என 920 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா்கள் அன்பரசி ராஜசேகரன் (கலசப்பாக்கம்), சாந்தி பெருமாள் (போளூா்), வட்டாட்சியா் ராஜராஜேஸ்வரி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், திமுக நிா்வாகிகள், அரசுத் துறை அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.