கயல், எதிர்நீச்சலை பின்னுக்குத்தள்ளிய தொடர்கள்! இந்த வார டிஆர்பி பட்டியல்!
Air India: MP-கள் பயணித்த விமானத்தில் தொழிற்நுட்பக் கோளாறு; `அதிஷ்டத்தால் தப்பினோம்' - வேணுகோபால்
இந்திய அரசின் Air Corporations Act மூலம் தேசியமயமாக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம், அதிக நட்டம் காரணமாக 2022 பிப்ரவரி மாதம் ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் தனியார்மயமாக்கி, டாடா சன்ஸ் குரூப்புக்கு விற்றது. அதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது பல்வேறு புகார்கள் எழுந்துவருகிறது. குறிப்பாக சமீபத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 240 பேர் உயிரிழந்த விவகாரம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதற்குப் பிறகும் ஏர் இந்தியா விமானங்கள் பல்வேறு தருணங்களில், பல்வேறு காரணங்களுக்காக தரையிறக்கப்பட்டு வருகிறது. அதன் தொடராக நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் காங்கிரஸ் செயலாளரும், எம்.பி-யுமான வேணுகோபால் உள்ளிட்ட 4 எம்.பி-கள் பயணித்திருக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி வேணுகோபால் தன் எக்ஸ் பக்கத்தில், ``திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI 2455, பயங்கரமான துயரத்தை நெருங்கிச் சென்றது. ஏற்கெனவே விமானம் தாமதமாகத்தான் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, முன்னெப்போதும் இல்லாதளவு கொந்தளிப்பில் சிக்கினோம். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, கேப்டன் விமானத்தில் சிக்னல் கோளாறு இருப்பதாக அறிவித்து சென்னைக்கு திருப்பி விடப்பட்டார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம், தரையிறங்கும் அனுமதிக்காக காத்திருந்தோம்.
முதல் முயற்சியில் தரையிறங்க முயன்றபோது அதிர்ச்சியூட்டும் விதமாக அந்த ஓடுபாதையில் வேறொரு விமானம் இருந்ததாகக் கூறப்படுகிறது. கேப்டனின் விரைவான முடிவு விமானத்தில் இருந்த ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றியது. இரண்டாவது முயற்சியில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. கேப்டனின் திறமையால் நாங்கள் காப்பாற்றப்பட்டோம். இதுபோன்ற தவறுகள் மீண்டும் ஒருபோதும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தையும் அவர் டேக் செய்திருக்கிறார்.
அது உண்மையல்ல
எம்.பி வேணுகோபாலின் பதிவுக்கு பதிலளித்த விமான நிறுவனம்,``சென்னைக்கு திருப்பி விடப்பட்டது சந்தேகத்திற்குரிய தொழில்நுட்பக் கோளாறு, மோசமான வானிலை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டது என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். சென்னை விமான நிலையத்தில் முதல் தரையிறங்கும் முயற்சியின் போது, ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருந்ததால் முதல் முயற்சியில் தரையிறக்கம் தடைபட்டது என்பது உண்மையல்ல.

சென்னை விமான போக்குவரத்து ஆணையமே, ஒரு சுற்றுச் சுற்றிச் செல்ல பைலட்டுக்கு அறிவுறுத்தியது. இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாள எங்கள் விமானிகள் நன்கு பயிற்சி பெற்றவர்கள். மேலும் இந்த விஷயத்தில், அவர்கள் சரியான நடைமுறைகளைப் பின்பற்றினர். இதுபோன்ற அனுபவம் தொந்தரவாக இருக்கலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உங்களுக்கு ஏற்படுத்திய சிரமத்திற்கு வருந்துகிறோம். இருப்பினும், பாதுகாப்புதான் எப்போதும் எங்கள் முன்னுரிமை" என விளக்கமளித்திருக்கிறது.