பழைய காருக்கு ரூ.4 லட்சம் செலவில் ‘இறுதிச் சடங்கு’: குஜராத் தொழிலதிபரின் வினோத ச...
Aval Awards: "என் ஆன்மா போகும் வரை என்னால் முடிந்தவற்றைச் செய்வேன்!" - 'தர்ம தேவதை' பூரணம் அம்மாள்
`வலக்கை கொடுப்பது இடக்கைக்குத் தெரியக் கூடாது’ என்ற அறமொழியின் மனித உருவம்... ஆயி என்கிற பூரணம் அம்மாள். ஏழரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள தன் நிலத்தை ஒருவரும் அறியாமல் அரசுப் பள்ளிக்கு ஆவணப்பதிவு செய்துகொடுத்த அபூர்வ மனுஷி. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கு இதுபற்றி தெரியவர, அவர் நேரில் சென்று பாராட்டியபோதுதான் ஊருக்கே தெரிந்தது. உலகமே வியந்தது. மகள் ஜனனி பிறந்து ஒன்றரை வருடங்களில் தன் கணவரை இழந்தார் பூரணம் அம்மாள். இடிந்துபோனவர், இனி மகள்தான் உலகமென்று வாழத் தொடங்கினார்.
கணவர் வேலை பார்த்த கனரா வங்கியில் கருணை அடிப்படையில் கிடைத்த கிளார்க் வேலையில் சேர்ந்தார். உணவு முதல் கல்வி வரை பூரணம் அம்மாளும், மகள் ஜனனியும் பிறருக்கு உதவுவதில் பெருவிருப்பம் கொண்டிருந்தனர். ஆனால் விதி, இளவயதிலேயே மகளின் உயிரையும் எடுத்துக்கொண்டது. ஆறித்தேற முடியாத ரணத்துடனேதான், ஜனனியின் நினைவாகவும், அவரது ஈகை குணத்தின் நீட்சியாகவும் யா.கொடிக்குளம் அரசுப் பள்ளிக்கு ஏழரை கோடி மதிப்புள்ள நிலத்தை அளித்துள்ளார் பூரணம் அம்மாள்.
இழப்பும், துயரும், உழைப்பும், பாசமும், கொடையுமாக நிற்கும் இந்தத் தாய்க்கு, அவள் விகடன் `தர்ம தேவதை' விருது வழங்கி மகுடம் சூட்டியிருக்கிறது. சென்னையில் இன்று (நவம்பர் 8) நடைபெற்ற அவள் விருதுகள் நிகழ்ச்சியில், பூரணம் அம்மாளுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த விருதை வழங்கினார்.
அப்போது மேடையில் பேசிய 'தர்ம தேவதை' பூரணம் அம்மாள், ```உலகளாவிய மக்கள் அனைவரும் ஒரு நொடியேனும் இந்தப் பள்ளி சிறப்பாகக் கட்டப்பட வேண்டும்’ என்று வேண்டிக்கொள்ளுங்கள். இன்னும் என்னால் முடிந்த பல செயல்களைச் செய்து வருகிறேன். அவையெல்லாவற்றையும் பொதுவெளியில் சொல்லக் கூடாது. பள்ளி கட்டப்பட்டு, திறக்கப்பட்டு அங்குக் குழந்தைகள் படிப்பதைப் பார்க்க ஆசையுடன் காத்திருக்கிறேன்.
என் மகள்தான் இந்தச் சமூக சேவைகளைச் செய்ய என்னைப் பெரிதும் ஊக்குவித்தவர். இறக்கும்போது எதையும் கொண்டுபோகப் போவதில்லை, முடிந்தவரை இயன்றதைக் கொடுத்துவிட்டுப் போவோம். என் ஆன்மா போகும்வரை என்னால் முடிந்தவற்றைச் செய்வேன். உங்களால் முடிந்த சிறு உதவியையும் கல்விக்கு, இல்லாதவர்களுக்குச் செய்யுங்கள்.
இந்த ‘தர்ம தேவதை’ விருதளித்து என்னைப் பெருமைப்படுத்திய விகடனுக்கு மனமார்ந்த நன்றி." என்று கூறிவிட்டு, பள்ளி மாணவர்கள் அனைவரும் சேர்ந்து பரிசாகக் கொடுத்த சேலையைப் பெற்றுக் கொண்டவர், ``போதும் என்று நினைக்க நினைக்க இறைவன் நமக்குக் கொடுத்துக் கொண்ட இருப்பான். எனக்கு இறைவன் நிறைய அன்புகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறான். நான் கட்டியிருக்கும் சேலை அமைச்சர் உதயநிதி பரிசாகக் கொடுத்தது. இப்போது பள்ளி மாணவர்கள் எனக்கு ஒரு சேலையைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள்." என்றார்.
இவர், உறவினர் ஒருவரின் உடல் நலனுக்காகத் தனது கிட்னியின் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதைத்தொடர்ந்து, விகடன் பரிசளித்த தன் கணவர் சிலையைப் பெற்றுக் கொண்ட பூரணம் அம்மாள், விகடன் தனக்குக் கொடுத்த பதக்கத்தைக் கணவரின் சிலைக்கு அணிவித்து கண்ணீருடன் மரியாதை செலுத்தினார்.