BB Tamil 8 : `மஞ்சரியின் பார்ட்னருமே பிக்பாஸ் வீட்டு வாசல் வரை வந்தார், ஆனா.!' - பிரேம் டாவின்சி
பிக்பாஸ் சீசன் 8 நிறைவடைய இன்னும் இரு வாரங்களே இருக்கும் சூழலில், பல ட்விஸ்டுகளை அரங்கேற்ற ஆயத்தமாகி விட்டார் பிக்பாஸ். மிட் வீக் எவ்பிக்ஷன், பணப்பெட்டி டாஸ்க் என வரிசையாக நிகழவிருக்கும் சூழலில் போட்டியாளர்களுடன் அவர்கள் குடும்பத்தினர் சந்திக்கும் நிகழ்வு தற்போது தொடங்கியிருக்கிறது.
அந்த வகையில் நேற்று மஞ்சரியின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குச் சென்று வந்தனர்.
இது தொடர்பாக மஞ்சரியின் தங்கை கணவரும் ஓவியருமான பிரேம் டாவின்சியைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
''பிக்பாஸ் வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி நிறைய கண்டிஷன் போட்டாங்க. அங்க எதை பேசலாம் எதை பேசக்கூடாது என்றெல்லாம் சொல்லிக் கொடுத்துதான் உள்ளே அனுப்பி விட்டாங்க. உள்ளே போனதும் எல்லா போட்டியாளர்களிடமும் பேசினோம். அவங்ககிட்ட வழக்கமான நல விசாரிப்பு களைத் தாண்டி எதுவும் பேசலை.
சௌந்தர்யா குறித்து நான் அங்க சொன்ன சில வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம்னு வெளியே வந்ததும் சொன்னாங்க. சௌந்தர்யாவுக்கு அவங்க ரசிகர்கள் ஆதரவு தர்றாங்கனு சொல்லியிருந்தேன். அதை ஏன் பேசி இருக்க வேண்டாம்னு சொன்னாங்கன்னு தெரியல'' என்றவரிடம் மஞ்சரி குறித்து விசாரித்தோம்.
''அவங்க நிகழ்ச்சிக்கு போன முதல் நாள் எப்படி இருந்தாங்களோ அப்படியேதான் இப்ப வரைக்கும் இருக்காங்க. சொல்லப்போனா, நாளுக்கு நாள் வலுவான போட்டியாளராக தான் ஆகிட்டிருக்காங்கன்னு சொல்லலாம். நிச்சயம் டாப் 5 போட்டியாளர்களில் ஒருத்தரா அவங்க வந்திடுவாங்கனு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. அதைத்தாண்டி அவங்க டைட்டில் வாங்கினாங்கன்னா அவங்க வாழ்க்கையில் அந்தத் தருணம் ஒரு மறக்க முடியாத தருணம்தான்'' என்ற பிரேமிடம் நிகழ்ச்சியில் மஞ்சரி பார்ட்னர் என குறிப்பிட்டிருந்தது குறித்தும் கேட்டோம்.
''அவங்க பாய் ஃப்ரண்டைத்தான் அப்படிக் குறிப்பிட்டிருந்தாங்க. அவருமே அன்னைக்கு எங்க கூட வந்திருந்தார். ஆனா பிக்பாஸ் வீட்டுக்குள் போறப்ப அவர் வரலை. பிக்பாஸ் அவரை ரொம்பவே எதிர்பார்க்கிகுறார். இறுதிச் சுற்றின் போதோ அல்லது ஒருவேளை அவங்க டைட்டில் வாங்கினா அந்தச் சமயத்துலயோ அவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில வரலாம்' என்கிறார்.