செய்திகள் :

Bengali Cinema: அப்போது இந்திய சினிமாவின் முகம்; ஆனால் இன்று.? - பெங்காலி சினிமாவின் வரலாறு! |Depth

post image

பெங்காலி சினிமாவுக்கு நீண்ட வரலாறு உண்டு. சர்வதேச சிறந்த திரைப்படங்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால், நிச்சயமாக அதில் பெங்காலி சினிமாவும் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும்.

1950-களில் இந்திய சினிமாவின் முகமாகவும் பெங்காலி சினிமா விளங்கியது. சொல்லப்போனால், அப்போது வந்த பெங்காலி திரைப்படங்கள் அகிரா குரோசாவா, மார்ட்டின் ஸ்கார்ஸிசி போன்ற உலக சினிமாவின் மாபெரும் இயக்குநர்களையும் ஈர்த்தன.

இப்படியான அற்புதமான நிகழ்வுகள் அனைத்தும் இயக்குநர் சத்யஜித் ரேயின் வருகைக்குப் பிறகுதான் நிகழ்ந்தன.

Sathyajit Ray
Sathyajit Ray

அப்போது வரை வழக்கமான டெம்ப்ளேட் கதைசொல்லலில் மூழ்கியிருந்த பாலிவுட் சினிமாவிலிருந்து சத்யஜித் ரேயின் படைப்புகள் பெரிதும் வேறுபட்டவை.

மேற்கு வங்க மக்கள் சந்திக்கும் எளிய பிரச்னைகளையும், அவர்களின் வாழ்வியலையும் சத்யஜித் ரே ஃபிலிம் ரோல்களில் பதிவு செய்தார். சத்யஜித் ரேயின் திரைப்படங்கள் வெளியான காலகட்டங்களை பெங்காலி சினிமாவின் பொற்காலம் எனக் குறிப்பிடுவர்.

பெங்காலி சினிமாவின் வரலாற்றை சத்யஜித் ரேயை விலக்கிவிட்டுப் பேசவே முடியாது. இந்திய சினிமாவை உலக அரங்குகளுக்கு எடுத்துச் சென்று பெருமை சேர்த்தவராகவும் இவர் விளங்குகிறார்.

அவர் இயக்கிய 'பதேர் பாஞ்சாலி' திரைப்படம்தான் அப்பு ட்ரையாலஜியின் முதல் திரைப்படம். மக்களின் வாழ்வியலை கச்சிதமாகப் படம்பிடித்து, கான் திரைப்பட விழாவில் சிறந்த ஹ்யூமன் டாக்குமெண்ட் விருதையும் அவர் வென்றார்.

சத்யஜித் ரேயைத் தொடர்ந்து வந்த இயக்குநர்கள் ரித்விக் கட்டக், மிருணல் சென் ஆகியோரும் பெங்காலி சினிமாவுக்கு முக்கியமான பங்காற்றியுள்ளனர்.

மக்கள் தங்கள் அடையாளத்திற்காகச் சந்திக்கும் போராட்டங்கள் முதல் வங்கதேச மக்களின் பிரச்னைகள் வரை இவர்களின் சினிமா பிரதிபலித்தது.

இப்படியான படைப்பாளிகளால் பல உலக சினிமா அரங்குகளில் ஓங்கி ஒலித்த பெங்காலி சினிமாவின் குரல், தற்போது குறைந்திருப்பதாகவே பல இயக்குநர்கள் கருதுகின்றனர்.

அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப்

அனுராக் காஷ்யப்

2024-ம் ஆண்டு இயக்குநர் அனுராக் காஷ்யப், "பெங்காலி சினிமா தனது பொற்காலத்திலிருந்து தற்போது கீழிறங்கியுள்ளது. பெங்காலி சினிமாவிலிருந்து தற்போது தரம் குறைந்த திரைப்படங்களே வந்து கொண்டிருக்கின்றன.

நான் இப்போது பெங்காலி திரைப்படங்களைப் பெரிதளவில் பார்ப்பதில்லை. நான் கடைசியாக மிருணல் சென்னின் திரைப்படத்தைத்தான் பார்த்தேன். சமகால பெங்காலி திரைப்படங்களில் முன்பிருந்த ஆழத்தைப் பார்க்க முடிவதில்லை.

இதற்கு பெங்காலி சினிமாவில் அதிகரித்த ரீமேக் கலாச்சாரமும் ஒரு முக்கியக் காரணம்," என வெளிப்படையாகப் பேசியிருந்தார்.

ஒரு காலத்தில் கோலோச்சிய பெங்காலி சினிமா, தற்போது பெரிதளவில் சோபிப்பதில்லை என்பதே பல முன்னணி இயக்குநர்களின் கருத்தாக உள்ளது.

1990-களுக்குப் பிறகுதான் இப்படியான சரிவை பெங்காலி சினிமா சந்தித்து வருகிறது. சரிவைச் சந்தித்த சமயத்திலும் இயக்குநர்கள் ரித்துபர்ணோ கோஷ் (Rituparno Ghosh), ஶ்ரீஜித் முகர்ஜி (Srijit Mukherji), கௌஷிக் கங்குலி (Kaushik Ganguly), அபர்ணா சென் (Aparna Sen), கௌதம் கோஷ் (Goutam Ghose) ஆகியோர் பெங்காலி சினிமாவுக்கு முக்கியமான திருப்பத்தைக் கொண்டுவந்தனர்.

Aparna Sen
Aparna Sen

இருப்பினும், பல கமர்ஷியல் திரைப்படங்களே அடுத்தடுத்து அங்கு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின.

இப்போதும் சில இயக்குநர்கள் பெங்காலி சினிமாவின் புகழைக் காப்பாற்ற குறிப்பிடத்தக்க படைப்புகளை இயக்கி வருகின்றனர். பெங்காலி சினிமாவின் இந்தச் சரிவுக்கு பல காரணங்களும் சொல்லப்படுகின்றன.

திரையரங்குகளுக்கு மக்களின் வருகை குறைந்ததைத் தொடர்ந்து, பெங்காலி சினிமா ரீமேக் எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்தது.

ஆனால், மற்ற சினிமாத் துறைகளுக்கு இந்த ரீமேக் கலாச்சாரம் ஓரளவு கைகொடுத்தது. பெங்காலி சினிமாவில் இதற்கு நேர் எதிரான முடிவை ரீமேக் படங்கள் தந்தன.

ரீமேக் திரைப்படங்கள் பெருமளவு பெங்காலி சினிமாவுக்கு கைகொடுக்காதது பற்றி வங்க மொழி இயக்குநர் பரம்ப்ரதா சட்டர்ஜி (Parambrata Chatterjee), "தென்னிந்திய திரைப்படங்களை இங்கு ரீமேக் செய்தது எங்களுக்கு கைகொடுக்கவில்லை.

Parambrata Chatterjee
Parambrata Chatterjee

கலையைப் பார்வையாளர்களுடன் இணைப்பதற்கு இடையேயான சமநிலையை நாங்கள் தவறவிட்டோம்," எனத் தெரிவித்திருக்கிறார்.

பெங்காலி சினிமாவில் சோதனை முயற்சியாக முதலில் ரீமேக் படங்களைச் செய்யவில்லை.

அது நிச்சயமாக பெங்காலி சினிமாவைச் சரிவிலிருந்து மீட்கும் என்ற நம்பிக்கையுடனேயே ரீமேக் கலாச்சாரத்தைத் தொடங்கியிருக்கின்றனர்.

அப்படங்களும் தரத்தில் குறைவாக இருந்ததாலும், அங்குள்ள மக்களுடன் சரியாக இணையாத காரணத்தினாலும், இப்படியான ரீமேக்குகள் மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தின.

பொருளாதாரக் காரணங்களாலும் பெங்காலி சினிமா பாதிக்கப்பட்டதாகப் பலர் கூறுகின்றனர்.

பெங்காலி சினிமா பெரிய பட்ஜெட் திரைப்படங்களை எடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் யாரும் முன்வருவதில்லை என்பதே பலரின் வேதனையான கருத்தாக உள்ளது.

காலத்திற்கேற்ப தெலுங்கு சினிமாவிலும், இந்தி சினிமாவிலும் படப்பிடிப்பிற்கான ஸ்டுடியோக்கள் பெருகின. ஆனால், அப்படியான முயற்சிகள் எதையும் காலமாற்றத்திற்கேற்ப கையில் எடுக்காததையும் பலர் குறையாகக் கருதுகின்றனர்.

ஸ்டுடியோக்களை மேம்படுத்துவது தொடர்பாக அரசும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

Annapoorna Studios In Hyderabad
Annapoorna Studios In Hyderabad

இதைத் தாண்டி, பெங்காலி சினிமாவைத் தயாரிக்கப் பெரும்பாலும் இந்தி தொலைக்காட்சித் துறைகளிலிருந்தே பலர் வந்திருக்கின்றனர்.

பட்ஜெட் குறைவாக இருப்பதால், கதைசொல்லலிலும், தரத்திலும், தொழில்நுட்ப ரீதியான தரத்தில் சரிவைச் சந்தித்ததாகவும் பார்க்கப்படுகிறது.

முன்பு, மேற்கு வங்கத்தில் 800-க்கும் மேற்பட்ட சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகள் இருந்தன. ஆனால், தற்போது இதில் 80 சதவீதம் திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அதனால், அங்கு திரைப்படங்களின் வசூலும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அந்தக் குறைவான திரையரங்குகளும் தரம் குறைந்த நிலையில் இருப்பதாகவே பலர் குற்றம் சாட்டுகின்றனர்.

மக்கள் பெங்காலி சினிமாவைத் தாண்டி மற்ற மொழி திரைப்படங்களை விரும்புவதால், அங்குள்ள திரையரங்குகள் பெங்காலி திரைப்படங்களுக்கு காலை மற்றும் இரவு நேரக் காட்சிகளை மட்டுமே ஒதுக்குகின்றன.

மற்ற நேரங்களில் பிற மொழித் திரைப்படங்களே அங்கு திரையிடப்பட்டு வருகின்றன. இன்றைய உலகில், படத்தை எடுப்பதைவிட, அதைச் சரியான முறையில் விளம்பரப்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் இயக்குநர்களுக்கு பெரும் சவாலாகிவிட்டது.

Yoddha Bengali Film - Magadheera Movie Remake
Yoddha Bengali Film - Magadheera Movie Remake

சமகால பெங்காலி திரைப்படங்களை விளம்பரப்படுத்தாததையும் பெரும் பிரச்னையாக அங்கிருப்பவர்கள் கருதுகின்றனர். திரைப்படங்களுக்கு சிறிய பட்ஜெட் கொடுக்கப்படும் நேரத்தில், பெங்காலி சினிமாவில் புரமோஷனுக்காக பெரும் பணத்தைச் செலவழிப்பதில்லை.

இப்படியான விஷயங்களால், நல்ல திரைப்படங்களாக இருந்தாலும், அவை மக்களிடையே சரியான கவனத்தை ஈர்க்கத் தவறுகின்றன.

சில பெங்காலி திரைப்படங்கள் இப்படியான சூழலில் நேரடியாக ஓடிடி தளங்களிலும் வெளியாகி வருகின்றன. ஆனால், அந்தப் படைப்புகளும் பெரிதளவில் கவனம் ஈர்க்கவில்லை.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஒவ்வொரு சினிமாவுக்கும் சில ஆஸ்தான சினிமா நட்சத்திரங்கள் இருப்பார்கள்.

அவர்களின் திரைப்படங்களுக்காகப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி, திரைப்படமும் வெற்றியை நோக்கி நகர்கிறது. பெங்காலி சினிமாவில், சமகாலத்தில் நல்ல கன்டென்ட்களைக் கொண்ட திரைப்படங்கள் பெரிதளவில் வராததால், அங்கு உச்ச நட்சத்திரங்களாக மிளிர எவருக்கும் வாய்ப்பு அமையவில்லை.

இதுவும் ஒரு குறையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், மற்ற சினிமாக்களைப் போல மாஸ் மசாலா திரைப்படங்களைக் கொடுத்து வெற்றியடைவதற்கு சில முயற்சிகளையும் பெங்காலி சினிமா கையில் எடுத்தது.

அப்படியான திரைப்படங்கள் கோரும் உச்ச நட்சத்திரங்கள், தொழில்நுட்ப விஷயங்கள் என எதுவும் இல்லாததால், அத்திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பெரிதளவில் சோபிக்கவில்லை.

Swaroop Biswas
Swaroop Biswas

இதைத் தாண்டி, முக்கியமாக இளம் இயக்குநர்களிடம் புதிய வடிவிலான கன்டென்ட் வெளிப்படாததும் பெரும் குறையாகப் பார்க்கப்படுகிறது.

வழக்கமான கதைகளை மீண்டும் மீண்டும் திரைப்படங்களாகக் கொண்டுவருவது அங்கிருக்கும் மக்களுக்கு அயர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பின்னால் சில அரசியல் காரணங்களும் இருப்பதாகப் பல இயக்குநர்கள் சொல்கின்றனர்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் அரூப் பிஸ்வாஸின் சகோதரரான ஸ்வரூப் பிஸ்வாஸ், பெங்காலி சினிமா துறையின் கிழக்கு இந்திய சினி தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.

இந்தக் கூட்டமைப்பின் மூலம் கொடுக்கப்படும் அழுத்தங்கள் குறித்தும், அவர்களின் கைகளைக் கட்டும் பிரச்னைகள் குறித்தும் பல இயக்குநர்கள் பேசி வருகின்றனர். இந்தப் பிரச்னை குறித்து வங்க மொழி இயக்குநர் மற்றும் நடிகரான கௌஷிக் கங்குலி, "கிழக்கு இந்திய சினி தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு, கட்டுப்பாட்டு நடைமுறைகள் மூலம் பெங்காலி திரைப்படத் துறையை அழித்து வருகிறது.

இந்தக் கூட்டமைப்பின் இப்படியான நேரடியான தலையீட்டிற்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியுடனான தொடர்பே காரணம்.

இவர்களின் தலையீடுகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்தான் தயாரிப்பாளர்களை அண்டை மாநிலங்களுக்குச் செல்ல வைக்கின்றன," எனக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

கூட்டமைப்பு விதித்த விதிகளை மீறியதற்காக வங்க மொழி இயக்குநரான ராகுல் முகர்ஜி திரைப்படம் இயக்குவதற்கு மூன்று மாத தடையையும் விதித்தது இந்த கூட்டமைப்பு.

Rahool Mukherjee
Rahool Mukherjee

கடந்த ஏப்ரல் மாதத்தில்கூட 14 பெங்காலி திரைப்பட இயக்குநர்கள் இந்தக் கூட்டமைப்பு மீது புகார் தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தாண்டி, பெங்காலி சினிமாவைச் சேர்ந்த பலரும் அம்மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர். கட்டுப்பாடுகளையும், பின்விளைவுகளையும் எண்ணி, சேஃப் ஜோனில் படங்களைக் கொடுத்து வருவதாகவும் பல இயக்குநர்கள் சொல்கின்றனர்.

இவையெல்லாம் பெங்காலி சினிமா சரிவைச் சந்தித்ததற்கு முக்கியக் காரணங்கள். இந்தப் பிரச்னைகளையெல்லாம் களைந்து, பெங்காலி சினிமாவின் பொற்காலம் மீண்டும் வர வேண்டும் என்ற நோக்கத்துடன் ஓடிடி, இளம் இயக்குநர்கள், புதிய கன்டென்ட் என புதிய நகர்வுகளுக்கான முயற்சியையும் இப்போது கையில் எடுத்திருக்கிறது.!

Chiyaan 64: மெய்யழகன் பட இயக்குநருடன் இணைந்த சியான் விக்ரம்; அடுத்த படம் குறித்த அப்டேட் இதோ!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விக்ரமின் 64வது திரைப்படத்தை, ‘96’ மற்றும் ‘மெய்யழகன்’ படங்களின் இயக்குநர் பிரேம் குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.‘9... மேலும் பார்க்க

Tat2: ரீல்ஸ் டு வெள்ளித்திரை; 'டாட்டூ' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகும் இன்ஃப்ளூயன்ஸர் சதீஷ்

சமூக ஊடகங்களில் பிரபலமான இன்ஃப்ளூயன்ஸரான சதீஷ், ‘டாட்டூ’ என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார்.இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் தனது மனைவி தீபாவுடன் ... மேலும் பார்க்க

Kerala: சுரேஷ்கோபி நடித்த சினிமா டைட்டில் மாற்றம்.. முடிவுக்கு வந்த சர்ச்சை; பட ரிலீஸ் எப்போது?

பிரவீன் நாராயணன் இயக்கத்தில் சுரேஷ்கோபி கதாநாயகனாக நடித்துள்ள சினிமா ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா. ஜே.எஸ்.கே என சுருக்கமாக விளம்பரப்படுத்தப்பட்ட இந்த சினிமாவில் அனுபமா பரமேஸ்வரன், `ஜானகி' என்ற கதாபாத்தி... மேலும் பார்க்க

மீண்டும் சீரியலில் ஸ்மிருதி இரானி: `ஒரு எபிசோடுக்கு இவ்வளவு சம்பளமா?' - வெளியான தகவல்!

பா.ஜ.க தலைமையிலான அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சரும், தொழில், ஜவுளி துறை அமைச்சருமாக இருந்தவர் ஸ்மிருதி இரானி. அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து ஊடகங்களில் விவாதப... மேலும் பார்க்க

'ஏங்க நான் சாப்பிட வரலைங்க’ திருச்செந்தூரில் போலீஸுடன் பிரச்னையா? - விள‌க்கும் பாடகர் வேல்முருகன்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமரிசையாக நடந்தேறியது. லட்சக் கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முருகனைத் தரிசித்து வருகின்றனர்.இ... மேலும் பார்க்க

Ooty : 75 ரகங்களில் 2 லட்சம் மலர் நாற்றுகள்; 2 -ம் சீசனுக்கு தயாராகும் சிம்ஸ் பூங்கா!

சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரியில் கோடை சீசன் நிறைவடைந்திருக்கிறது. ஏப்ரல், மற்றும் மே மாதங்களில் மட்டும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரியைக் கண்டு ரசித்துச் சென்ற நிலையில், தற்போதும் சுற்றுல... மேலும் பார்க்க