டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
Blaise Metreweli: பிரிட்டிஷ் உளவு நிறுவனத்துக்கு தலைமையேற்கும் முதல் பெண் - இவரது பொறுப்புகள் என்ன?
இங்கிலாந்தின் உளவு அமைப்பான MI6, அதன் 116 ஆண்டு வரலாற்றில் முதன் பெண் தலைமையைப் பெற்றுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கடந்த ஞாயிற்றுக் கிழமை அறிவித்ததன் படி, இந்த ஆண்டு MI6 தலைவர் ரிச்சர்ட் மூர்க்கு பிறகு பிளேஸ் மெட்ரெவெலி (Blaise Metreweli) அவரது இடத்தை நிரப்புவார்.
47 வயதாகும் பிளேஸ், 1997 முதல் உளவுத்துறையில் பணியாற்றிவருகிறார். இப்போது MI6-ன் Q பிரிவான தொழில்நுட்பம் மற்றும் புதுமை (Technology and Innovation) பிரிவை வழிநடத்துகிறார்.
MI6 அமைப்பு வெளிநாடுகளில் உளவு பார்த்து இங்கிலாந்து அரசுக்கு தகவல்கள் பகிர்வதன் மூலம் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுகிறது. இவர்கள் வெளியுறவுத்துறைக்கு அறிக்கைகளை சமர்பிப்பர். நிலைமையை ஆராய்ந்து பிரதமருக்கும் ஆலோசனைகள் வழங்குவர்.
MI6, பயங்கரவாதத்தை நிறுத்துதல், எதிரி நாடுகளின் செயல்பாடுகளை சீர்குலைத்தல் மற்றும் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகிய முக்கிய இலக்குகளைக் கொண்டிருக்கிறது.
இந்த அமைப்பின் தலைவர் "C" என குறிப்பிடப்படுவார். இதில் பணியாற்றுபவர்களில் இவர் மட்டுமே பொதுவெளியில் பங்கேற்பார். பலரும் C என்றால் Chief என நினைக்கின்றனர். ஆனால் அதற்கு ஒரு வரலாறு உள்ளது.
பிரிட்டனின் முதல் உளவு நிறுவனம் 1900-களில் உருவானது. அதை Secret Service Bureau என அழைத்தனர். இதனை வழிநடத்திய கடற்படைத் தலைவர் கேப்டன் மான்ஸ்ஃபீல்ட் கம்மிங், "C" என்ற எழுத்தால் கையொப்பமிடுவார். அவருக்குப் பிறகும் அவரது நினைவாக தலைமை பதவியில் இருக்கும் நபரை அவ்வாறே அழைத்தனர்.
அவர் வழியிலேயே இன்றுவரை பச்சை மையில் கையொப்பமிடும் பழக்கமும் தொடர்கிறது. C ஐக்கிய ராச்சியத்தின் மற்ற உளவு அமைப்புகளான M15, GCHQ உடனும் இணைந்து பணியாற்றுவார்.
இந்த பதவிக்கு சில வரையறைகளும் உள்ளன. இவர்கள் ஏஜென்ட்களுக்கு குறிப்பிட்ட உத்தரவுகளை மட்டுமே வழங்க முடியும். உதாரணமாக நாட்டுக்கு ஆபத்தான ஒரு நபரை வெளிநாட்டில் கொலை செய்ய வேண்டுமெனில் அதற்கான உத்தரவை C பிறப்பிக்க முடியாது. பாதுகாப்பு செயலாளரே அந்த முடிவை எடுக்க வேண்டும்.
பிளேஸ் மெட்ரெவெலி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் படித்திருக்கிறார். M15-லும் பணியாற்றியுள்ளார். அங்கு இயக்குநர் அளவிலான பதவிகளை வகித்திருக்கிறார். தனது பணி நாள்களை மத்திய கிழக்கிலும், பிற ஐரோப்பிய நாடுகளிலும் கழித்துள்ளார்.
அவரது சேவைகளுக்காக மன்னரின் 2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டு மற்றும் சர்வதேச பிறந்தநாள் கௌரவப் பட்டியலில், பிரிட்டிஷ் வெளியுறவுக் கொள்கைக்கு அவரது சேவைகளுக்காக அவருக்கு செயிண்ட் மைக்கேல் மற்றும் செயிண்ட் ஜார்ஜ் (CMG) என்ற விருது வழங்கப்பட்டது.