Cyber Crime: எம்.பி வீட்டில் டிஜிட்டல் கைது மோசடி.. மும்பையில் அதிகரிக்கும் இணையவழி குற்றங்கள்..!
மும்பையில் இந்த ஆண்டு மட்டும் 4054 இணையவழி குற்றங்கள் நடந்துள்ளது. இதில் 920 வழக்குகளில் துப்புத்துலங்கி உள்ளது. இக்குற்றம் தொடர்பாக 970 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 3191 இணையவழி குற்றங்கள் மும்பையில் பதிவாகி இருந்தது.
மும்பையில் முதியவர்கள் மற்றும் பெண்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து, அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதியின் 77 வயது தந்தையை மர்ம நபர்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக பிரியங்கா சதுர்வேதி வெளியிட்டுள்ள செய்தியில், ''எனது தந்தையை சைபர் கிரிமினல்கள் அரை மணி நேரம் டிஜிட்டல் முறையில் கைது செய்திருந்தனர். அதிர்ஷ்டவசமாக என்ன நடக்கிறது என்பதை எனது தந்தை தெரிந்து கொண்டதால் எந்த வித இழப்பையும் சந்திக்கவில்லை. இது தொடர்பாக போலீஸில் புகார் செய்துள்ளார்.
மும்பை இணைய குற்றப்பிரிவு காவல்துறை கடந்த 18 ஆண்டுகளாக துணை கமிஷனர் இல்லாமல் இருக்கிறது. இணையவழி குற்றங்களை தடுக்க மத்திய மாநில அரசுகள் முன்னுரிமை கொடுக்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சகத்திற்கு பல முறை கடிதம் எழுதினேன். ஆனால் அக்கடிதத்திற்கு எந்த வித பதிலும் வரவில்லை'' என்று சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார்.
Cyber Crime மோசடி நடப்பது எப்படி?
பிரியங்கா சதுர்வேதியின் தந்தை மட்டுமல்லாது பலர் தொடர்ந்து டிஜிட்டல் கைதுக்கு ஆளாகி வருகின்றனர். கார்ப்பரேட் கம்பெனிகள் கூட இணையவழி கிரிமினல்களிடம் பணத்தை இழந்து வருகின்றன. மத்திய அரசு இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது. ஆனாலும் மக்கள் சைபர் கிரிமினல்களின் வலையில் சிக்குவது மட்டும் குறையவில்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 38 சதவீதம் இணையவழி குற்றங்கள் அதிகரித்துள்ளது. எதாவது மர்ம நம்பரில் இருந்து போன் வரும். அதில் பேசும் நபர் உங்களது வங்கிக்கணக்கு முடக்கப்பட இருக்கிறது. அது குறித்து தெரிந்து கொள்ள ஒன்றை அழுத்துங்கள் என்று வாய்ஸ் சொல்லும். அதனை அழுத்தினால் உடனே இணையவழி குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட நபரை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து டிஜிட்டல் முறையில் கைது செய்து மோசடி செய்துவிடுகின்றனர்.