ரூ.2900 கோடி வங்கி மோசடி: அனில் அம்பானி மீது அமலாக்கத் துறை புதிய வழக்கு
Digital Arrest: 8 நாள்களில் ரூ. 31 லட்சம்; போலி நீதிபதியிடம் முன்னாள் எம்.எல்.ஏ ஏமாந்தது எப்படி?
சிபிஐ, போலீஸ், நீதிபதி போன்ற பெயர்களைப் பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் டிஜிட்டல் கைது என்ற முறையில் பொதுமக்களிடம் ஆன்லைன் வழியாக ஏமாற்றி பணம் பறித்துவரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கின்றன.
இதில், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களும் பணம் இழந்த சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
அந்த வரிசையில், கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. குண்டப்பா வகீல் (73 வயது) என்பவர் 8 நாள்களில் ரூ. 31 லட்சத்தை இழந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரையில், கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி மாலை குண்டப்பா வகீலைத் தொடர்புகொண்ட ஒருவர், தன்னை சிபிஐ என்று அறிமுகம் செய்து, தாங்கள் தொழிலதிபர் நரேஷ் கோயல் பணமோசடி வழக்கில் ஈடுபட்டிருப்பதாக அவரைக் குற்றம் சாட்டினார்.
மேலும், அதில் பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்களில் தங்கள் பெயரிலான வங்கிக் கணக்கு, ஏடிஎம் போன்றவை இருப்பதாகவும் கூறி குண்டப்பா வகீலின் சொத்து விவரங்களை அவர் சேகரித்தார்.
அதைத்தொடர்ந்து, அந்த அழைப்பு நீரஜ் குமார் என்பவருக்கு மாற்றப்பட்டது. அவர் தன்னை துணை காவல் ஆணையர் என்று குறிப்பிட்டு, குண்டப்பா வகீலை டிஜிட்டல் முறையில் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்தார்.
அடுத்த நாள் மதியம் 1 மணியளவில் மீண்டும் குண்டப்பா வகீலை அவர்கள் தொடர்புகொண்டு வீடியோ கால் வழியாக நீதிபதி என ஒருவர் முன் ஆஜர்படுத்தினர்.
அப்போது, அந்த நீதிபதி அவரிடம் தான் குற்றவாளி அல்ல என்று உறுதிமொழி எழுதும்படி கூறி, ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட் (RTGS) மூலம் ரூ.10.99 லட்சத்தை ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றும்படியும் உத்தரவிட்டார்.
அதன் பின்னர், நீரஜ் குமாரும், மற்றொரு அதிகாரியாக சந்தீப் குமாரும், அவரைத் தினமும் சந்தித்து விசாரணை என்ற போர்வையில் அவர் உட்பட அவரது குடும்பத்தினரின் வங்கி விவரங்களைச் சேகரித்தனர்.
சில நாள்கள் கழித்து குண்டப்பா வகீல் மீண்டும் வீடியோ காலில் அதே நீதிபதி முன் நிறுத்தப்பட்டார். அப்போது, இந்த வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ-க்கு ரூ. 20 லட்சத்தை மாற்றுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

பணம் திருப்பித் தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்ட பின்னர் குண்டப்பா வகீல் அவரின் உத்தரவை அப்படியே பின்பற்றினார்.
ஆனால், அந்தப் பணம் திரும்ப வரவேயில்லை. தன்னைத் தொடர்பு கொண்டவர்கள் திடீரென காணாமல் போன பிறகுதான் டிஜிட்டல் கைது என்ற பெயரில் தான் ஏமாந்திருப்பதை அவர் உணர்ந்திருக்கிறார்.
பிறகு உடனடியாக இந்த விஷயத்தைத் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடத்தில் தெரியப்படுத்திய அவர், செப்டம்பர் 6-ம் தேதி சட்டப்பூர்வமாக போலீஸில் புகாரளித்தார்.