சென்னை: காதல் ஜோடி தற்கொலை - அதிர்ச்சியில் குடும்பம்!
சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் திரிஷா (20). இவர், அண்ணாநகரில் உள்ள ஜவுளி கடையில் வேலைப்பார்த்து வந்தார். அப்போது அதே ஜவுளி கடையில் வேலை செய்துவந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராபின் (22) என்பவருடன் திரிஷாவுக்கு காதல் மலர்ந்தது. இருவரும் உயிருக்கு உயிராக கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டினருக்கும் தெரியவந்தது. உடனே காதலுக்கு இருவீட்டிலும் பச்சை கொடி காட்டப்பட்டதால் ராபினும் திரிஷாவும் மகிழ்ச்சியடைந்தனர். அதன்பிறகு இருவரும் கணவன் மனைவி போல வாழ தொடங்கினர்.

இந்தநிலையில்தான் இந்தக் காதல் ஜோடி வேப்பேரி பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியது. சந்தோஷமாக சென்ற இவர்களின் காதல் வாழ்க்கையில் திடீரென புயல் வீச தொடங்கியது. அதனால் வேப்பேரியில் உள்ள தனியார் விடுதியில் ராபினுக்கும் திரிஷாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திரிஷா, திருமணத்துக்கு முன்பே உன் சுயரூபம் எனக்கு தெரிந்து விட்டது. நாம் இருவரும் இனிமேல் சந்தோஷமாக வாழ முடியாது. நமக்குள் ஏற்பட்ட பிரிவை என் குடும்பத்திலும் கூற முடியாது. நான் தவறு செய்துவிட்டேன் என மனவிரக்தியோடு ராபினிடம் பேசியிருக்கிறார். அதோடு இனிமேல் நான் உயிர் வாழ விரும்பவில்லை எனவும் கூறியிருக்கிறார் திரிஷா. அதைக் கேட்ட ராபினும் உன்னை நம்பி நானும் ஏமாந்துவிட்டேன் என்று கூறிவிட்டு விடுதி அறையை வெளிபக்கமாக பூட்டிவிட்டு திருவள்ளூருக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது.
விடுதி அறையில் தனியாக இருந்த திரிஷா, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. வீட்டுக்குச் சென்ற ராபின், திரிஷாவின் தோழி ஒருவருக்கு போன் செய்து நடந்த விவரங்களைக் கூறியதோடு விடுதிக்குச் சென்று திரிஷாவை பார்க்கும் போது கூறியிருக்கிறார். இதையடுத்து திரிஷாவின் தோழி, விடுதிக்கு வந்து அங்குள்ளவர்களிடம் விவரத்தை தெரிவித்திருக்கிறார். இதையடுத்து திரிஷாவும் ராபினும் தங்கியிருந்த 103 நம்பர் அறைக்குச் சென்ற விடுதி ஊழியர்கள் மாற்று சாவி மூலம் கதவைத் திறந்து பார்த்தனர். அப்போது திரிஷா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

உடனடியாக வேப்பேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் திரிஷாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு திரிஷாவின் மரணம் குறித்தும் போலீஸார் விசாரித்து வருகிறார். விடுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் திரிஷா தற்கொலை செய்து கொண்ட தகவலை கேள்விபட்ட ராபின், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தகவலைக் கேள்விபட்ட திருவள்ளூர் மாவட்ட போலீஸார், ராபினின் சடலத்தை மீட்டு விசாரித்து வருகிறார்கள். காதலர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.