கூடலூர்: தொடரும் யானை - மனித எதிர்கொள்ளல்கள்; 4 மாதத்தில் 5 பேர் உயிரிழப்பு; கொதிக்கும் மக்கள்
மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் முக்கிய இடத்தில் இருக்கிறது. அதிலும் குறிப்பாக யானை - மனித எதிர்கொள்ளல்களைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கிறது.
குடியிருப்புப் பகுதிகளில் நடமாடி வரும் யானைகளை விரட்ட கும்கி யானைகள் முதல் நவீன தெர்மல் டிரோன் கேமிராக்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், எதிர்கொள்ளல்கள் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில், கூடலூர் அருகில் உள்ள ஓவேலி பகுதியில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் சூப்பர்வைசராகப் பணியாற்றி வந்த ஒருவரை இன்று காலை யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அவருடன் இருந்த மற்றொருவர் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 4 மாதங்களில் 5 பேர் வரை யானை தாக்கியதில் உயிரிழந்த சம்பவங்கள் உள்ளூர் மக்களைக் கொதிப்படையச் செய்திருக்கிறது.
இது குறித்துத் தெரிவித்த கூடலூர் மக்கள், "ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட பெரியார் நகர்ப் பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் மற்றும் அவரின் நண்பர் செல்லதுரை இருவரும் அங்குள்ள தனியார் தேயிலைத் தோட்டத்திற்குப் பணிக்குச் செல்கையில் இருசக்கர வாகனத்தில் செல்கையில் சாலை ஓரத்தில் நின்றிருந்த ஒற்றைக் காட்டு யானை இருவரையும் தாக்கியது.
காயங்களுடன் உயிருக்குப் போராடிய இருவரையும் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். சம்சுதீன் பரிதாபமாக உயிரிழந்தார்.

காயமடைந்த செல்லதுரை உயர் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். கூடலூர் பகுதியில் கடந்த 4 மாதத்தில் 5 பேர் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். வழித்தடங்களை இழந்து குடியிருப்புப் பகுதிகளில் நடமாடி வரும் யானைகளுக்கு உள்ள பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து ஆய்வு செய்ய வனத்துறை அக்கறை காட்டுவதில்லை.
அதன் காரணமாகவே வனத்துறையைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டு வருகிறோம். உரியத் தீர்வு எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும்" என்றனர்.