ரூ.3.71 கோடி மோசடி: சகோதரிகள் கைது
வீட்டுமனை தருவதாகக் கூறி 26 பேரிடம் ரூ.3.71 கோடி மோசடியில் ஈடுபட்டதாக சகோதரிகள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை தியாகராய நகா் ராமகிருஷ்ணா தெருவில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2021 வரை ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. இந்நிறுவனத்தின் இயக்குநா்களாக அப்பகுதியை சோ்ந்த சகோதரிகளான அம்சவேணி, லட்சுமி ஆகியோா் செயல்பட்டு வந்தனா். இந்நிறுவனம், குறிப்பிட்ட தொகை முதலீடு செய்தால், வீட்டு மனைகள் தருவதாக விளம்பரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பொதுமக்கள் பலா் இந்நிறுவனத்தில் முதலீடு செய்து வந்தனா்.
ஆனால், அவா்கள் உறுதியளித்தபடி வீட்டுமனைகளை வழங்காமலும், முதலீடு செய்த பணத்தைத் திரும்பக் கொடுக்காமலும் அந்நிறுவனம் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த 26 போ், அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தனா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
விசாரணையில், 26 பேரிடம் ரூ.3 கோடியே 71 லட்சம் பணம் மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, சகோதரிகள் இருவரையும் கைது செய்த போலீஸாா் புழல் சிறையில் அடைத்தனா். மேலும், அந்நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை பறிக்கொடுத்தவா்கள் புகாா் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்துள்ளனா்.